BJP H.Raja should apologize - Seeman
தமிழினத்தின் பெருங்கவியான கவிப்பேரரசு வைரமுத்துவை இழிவுபடுத்தியதற்கு எச்.ராஜா வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் குறித்து கருத்தரங்ம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம், கடவுள்களுக்கிடையே உள்ள வேறுபாடு பற்றி அவர் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில் எவரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல என்றும், புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்றும் பதிவிட்டிருந்தார். கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில், தமிழனத்தின் பெருங்கவிகளில் ஒருவரான கவிப்பேரரசு வைரமுத்துவை இழிவுபடுத்திய எச்.ராஜா, உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
எச்.ராஜா, கவிஞர் வைரமுத்துவை, தரம் தாழ்ந்த சொற்களால் தாக்கி பேசியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழி செயலாகும் என்றும் கூறியுள்ளார்.
ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை எந்த வகையிலும் இழிவுபடுத்தவில்லை என்பதைத் தெளிவுபடுத்தி எவரையும் புண்படுத்துவது தனது நோக்கமன்று, தன் எழுத்துக்களால் யாரரேனும் புண்பட்டிருந்தால் வருந்துவதாகவும் அவர் கூறிய பின்னரும் தொடர்ச்சியாக பாஜகவினர் அவருக்கு நேரடியாக அழைத்து இழிவாக பேசுவதையும், மிரட்டுவதையும், அக்கட்சியின் உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் எவ்வகையில் ஏற்கிறார்கள் என்பதை தெளிவுபடுதத வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆண்டாள் தனது உணர்ச்சி மேலீட்டினால் தெய்வமென வழிபடும் கண்ணனை தன்னுடைய மணாளனாக பாவித்து சொற்களின் கவிதை அழகினால், தமிழ் மொழி சிறக்க பாடி நின்றவர். அவரது பாடல்களில் ஒரு வரி கூட சமஸ்கிருத சொல்லாடல்களை எங்கும் காண இயலாது. அவ்வாறு இருக்கையில் சமஸ்கிருதமே இந்தியாவின் தாய்மொழி என பிதற்றும் எச்.ராஜா போன்றோருக்கு ஆண்டாள் பற்றி பேச எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என்றார்.
வரலாற்றில் தமிழர்கள் ஒருபோதும் இந்துக்களாகவே அடையாளப்படுத்தப்படவே இல்லை. அவர்கள் சைவர்களாக, வைணவர்களாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். தமிழினத்துக்கும், தமிழ் மொழிக்கும் எவ்வித தொடர்புமற்ற எச்.ராஜா, தமிழனத்தின் பெருங்கவியான கவிப்பேரரசு வைரமுத்துவை இழிவுபடுத்தியதற்கு வெளிப்படையாக மன்னிப்புக் கோர வேண்டும். இல்லையேல் அதற்கான கடும் எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிப்பதாகவும் சீமான் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
