அங்கே குழுமியிருந்த பாஜகவினர் பாரத்மாதாகி ஜே என கூச்சலிட்டுக்கொண்டே  திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். விசிக கொடிகளைப் பிடுங்கி எறிந்துள்ளனர். எதிர்ப்புத் தெரிவித்த விசிகவினர் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.  

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தாக்குதலில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவறவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் நான் காலை (11.30மணி) மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்துவிட்டுத் திரும்பினேன். அப்போது அங்கே குழுமியிருந்த பாஜகவினர் பாரத்மாதாகி ஜே என கூச்சலிட்டுக்கொண்டே திடீர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். விசிக கொடிகளைப் பிடுங்கி எறிந்துள்ளனர். எதிர்ப்புத் தெரிவித்த விசிகவினர் மீது கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். 

அதில் தமிழ்க்கதிர் என்பவர் உட்பட மூன்றுபேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டு ரவுடிகளை ஏவி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ள சனாதனக் கும்பலான பாஜகவினரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். புரட்சியாளர் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை. இந்த நாடக அரசியலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம். இவ்வாறு அவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் வழக்கம் போல அரசியல் கட்சிகள் சென்னை கோயம்பேட்டில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் ஆகியோர் கோயம்பேட்டில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக இன்று காலை 11 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கோயம்பேட்டில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்க வருவதையொட்டி அக்கட்சியின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சாலை ஓரத்தில் அக்காட்சியின் கொடிகள், தோரணங்கள் அமைக்கப்பட்டன திருமாவளவனின் வருகைக்குப் பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த பாஜகவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்காக பாஜக கொடிக்கம்பங்களும் நடப்பட்டிருந்தது. அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் வந்து சென்ற பிறகு நீங்கள் ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது மோதலாக மாறியது. அங்கு கல்லெறி சம்பவமும் நடந்தது. அதில் பாஜகவினர் 3 பேருக்கு மண்டை உடைந்தது. விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் இரண்டு காவலர்கள் என மொத்தம் 8 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டுவகையில் பாஜக நடந்து கொள்கிறது வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல என்றார். இந்நிலையில் திருமாவளவன் வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.