எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் பாஜக அரசின் சகிப்புத்தன்மையற்ற அடக்குமுறை கண்டனத்திற்கு உரியது என எஸ்.டி.பி.ஐ. கட்சி எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:-  நடைபெற்றுவரும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரிலிருந்து 8 எதிர்க்கட்சி எம்.பிக்களை ஒருவார காலத்திற்கு இடைநீக்கம் செய்திருப்பது என்பது ஜனநாயக விரோத செயல் மட்டுமல்ல, அது எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் ஆர்.எஸ்.எஸ். பாசிச சிந்தனைகளால் ஆட்டுவிக்கப்படும் ஆளும் பாஜக அரசின் வெளிப்படையான அடக்குமுறையாகும். 

விவசாயிகள் விரோத 3 வேளாண் மசோதாக்களை  நாடாளுமன்றத்தில் திங்களன்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் வாக்கெடுப்புக்கு முன்வைக்கும்போது, எதிர்கட்சி எம்.பிக்கள் முன்வைத்த யோசனைகளை அமைச்சர் செவிசாய்க்காத நிலையில், ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, 8 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். முதுகெலும்பு இல்லாத மத்திய அரசின் இந்த செயல், எதிர்ப்புக் குரல்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை இல்லாத நிலையை வெளிக்காட்டுகிறது. 

எதிர்ப்புக் குரல்கள் மற்றும் ஆளும் அரசைக் கேள்வி கேட்கும் சுதந்திரம் என்பது  ஆரோக்கியமிக்க ஜனநாயகத்தின் முக்கியக் கூறுகளாகும். பாசிச சிந்தனை கொண்ட பாஜகவிற்கு ஜனநாயகத்தைக் கண்டு அச்சம் இருப்பதோடு மட்டுமல்லாமல், ஜனநாயத்தின் மீதான நம்பிக்கையில் சிறிதளவும் உடன்பாடு இல்லாதவர்கள் என்பது தெளிவானதாகும்.எந்தவித எதிர்ப்பும், இடையூறும் இல்லாமல் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் முற்றிலும் விவசாயிகள் விரோதமானதாகவும், கார்பரேட்டுகளுக்கு முழுக்க சாதகமாகவும் இருப்பதால் நாடெங்கும் விவசாயிகள் பெருந்திரளான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பாஜக அரசு வேளாண் மசோதாக்கள் மீதான திறந்த விவாதங்களுக்கு அஞ்சி பதுங்குவதோடு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதம் மற்றும் வாக்கெடுப்பை ஒரு நாள் தள்ளிவைக்கவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து, அவசரகதியில் மசோதாவை நிறைவேற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது. 

ஆளும்  பாஜக அரசு பெரும்பான்மை இல்லாத ராஜ்ய சபாவில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, குரல் வாக்கெடுப்பு முறையில் தந்திரமாக மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டது. இந்தியாவில் ஜனநாயகம் என்பது தீவிரவாத வலதுசாரி பாசிச சிந்தனை கொண்ட பாஜக ஆட்சியில் கடந்தகால கதையாக ஆகிவிட்டது. நாட்டில் ஜனநாயகத்தை  குழித்தோண்டி புதைக்கும் செயல்களாலும், ஆளும் பாஜக அரசின் வளர்ந்துவரும் சகிப்புத்தன்மையற்ற போக்காலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளது. மத்திய பாஜக அரசின் நம்பகத்தன்மையற்ற, நெறிமுறையற்ற ஜனநாயக விரோதச் செயல்களை நாட்டு மக்கள் ஜனநாயக முறையில் கடுமையாக எதிர்க்கவும், பாஜக அரசின் ஜனநாயகப் படுகொலைகளை தடுத்து நிறுத்திடவும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.