ஜல்லிக்கட்டை இந்தாண்டு நடத்த வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன.

குறிப்பிடும் வகையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டக்களத்தில் குதித்து வருகின்றனர். நாளாக நாளாக ஜல்லிக்கட்டு மீதான எதிர்பார்ப்புகள் எகிறி வரும் நிலையில், அதுதொடர்பாக பாஜக தலைவர்கள் மாறி மாறி கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். 

ஜல்லிக்கட்டு நடத்த தனிச்சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார். மத்திய அமைச்சர் தவே, நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர்தான் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். மற்றொரு மத்திய அமைச்சரான வெங்கய்ய நாயுடு, தனக்கும் ஜல்லிக்கட்டுக்கும் சம்பந்தமே இல்லை என்று பேட்டியளித்திருந்தார். 

தமிழக பாஜக தலைவர்கள் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும்… நடக்கும்… என்றே கூறி வந்தனர். இதற்கிடையே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மாநில இளைஞரணி துணைத்தலைவர் சத்திய பாமா பதவி விலகியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான இல.கணேசன் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தானும் நம்புவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியும் நம்புவதாகவும் கூறினார்.

மேலும் பேசிய அவர் “ஜல்லிக்கட்டுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதே என் விருப்பம். ஏறுதழுவுதல் என்ற பெயரில் ஜல்லிக்கட்டை நடத்த தமிழக முதலமைச்சர் பரிசீலனை செய்யலாம்.” என்றார்.