திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மானூர் பேருந்து நிலையத்தில் உள்ள அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி ஏற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை பாஜக இயக்குவதாக எதிர்கட்சிகளால் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வற்புறுத்தலின்பேரிலேயே தான் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்ததாக ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் தெரிவித்திருந்தார். 

இதனால், பாஜகதான் அதிமுக கட்சி விவகாரத்தை தீர்மானிக்கிறது என்ற கருத்து இருந்து வருகிறது. தமிழக மக்கள் நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், எதிர்கட்சியினர் கூறுவதுபோல் அடிபணியவில்லை என்றும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மானூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி அதிமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக அதிமுக கொடி கம்பத்தில் இருந்து பாஜக கொடியை இறக்கினர். அது தொடர்பாக போலீசில் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து, அதிமுக கொடி கம்பத்தில், பாஜக கொடியை ஏற்றிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.