திமுகவில் நட்சத்திர பேச்சாளர்களான ஆ.ராசா, லியோனியை அடுத்து அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய விதமாக பேசி வருகிறார். கடந்த 30ம் தேதி அன்று தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது  “திமுகவின் இளவரசர், கட்சியின் மூத்த தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு முக்கியப் பதவிக்கு வந்துவிட்டார்'' என்று உதயநிதியை சுட்டிக் காட்டி வாரிசு அரசியலை விமர்சித்தார். 

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இரு தினங்களுக்கு முன்பு தாராபுரம் பிரச்சாரத்தில்  பேசிய உதயநிதி ஸ்டாலின், ``நேற்று இங்கு வந்த பிரதமர் மோடி, நான் குறுக்கு வழியில் வந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார். இதை யார் சொல்கிறார் என்று பாருங்கள். எத்தனை முக்கியத் தலைவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, குஜராத்தின் முதல்வரானார் மோடி என்பது உங்களுக்குத் தெரியுமா? என்னிடம் பட்டியலே இருக்கிறது'' என்று பேசிய உதயநிதி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட சில தலைவர்களின் பெயரைப் பட்டியலிட்டார்.

மேலும் உச்சபட்சமாக அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய தலைவர்கள், மோடியின் சித்தராவதைக் காரணமாகத்தான் உயிரிழந்தனர் என பேசியது பாஜகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உதயநிதியின் இந்த பேச்சுக்கு சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லியின் மகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாஜகவின் தலைவர்கள் பலரும் உதயநிதியின் பேச்சுக்கு கண்டன குரல் எழுப்பினர். 

தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்து, அவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு இவரின் பிரச்சாரத்திற்கு தடை விதித்து, நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் இருந்தும் நீக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.