இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் சேர்த்து எல்லா கட்சிகளுமே மொத்தம் ரூ.60,000 கோடியை தேர்தலுக்கு செலவு செய்துள்ளன. இதில் பாஜக மட்டுமே ரூ.28,000 கோடியை செலவு செய்துள்ளது. கட்சிகள் செய்த மொத்த செலவில் இது 45 சதவீதம்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மட்டும் 28,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது என்றும் அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பதையும் அக்கட்சி விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று அதல பாதாளத்துக்கு சென்றது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதால், அக்கட்சி தலைமை முதல் தொண்டர்கள் வரை அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே தேர்தலில் சதி இருப்பதாகவும், வாக்கு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் கூறிவருகின்றன.

இந்நிலையில் தேர்தலுக்காக பாஜக 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சி எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் மனு சிங்வி இதைத் தெரிவித்துள்ளார். “ஊடக ஆய்வுகள் மையத்தின் தரவுகளின்படி சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி தேர்தலுக்காக பாஜக ரூ. 28,000 கோடியைச் செலவு செய்திருக்கிறது. இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் சேர்த்து எல்லா கட்சிகளுமே மொத்தம் ரூ.60,000 கோடியை தேர்தலுக்கு செலவு செய்துள்ளன. இதில் பாஜக மட்டுமே ரூ.28,000 கோடியை செலவு செய்துள்ளது. கட்சிகள் செய்த மொத்த செலவில் இது 45 சதவீதம். 
இந்தத் தேர்தலில் பாஜக செலவிட்ட தொகையானது இந்தியாவின் கல்வி பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்படும் தொகையில் மூன்றில் இரு பங்கு ஆகும். சுகாதாரப் பட்ஜெட்டில் இத்தொகை 43 சதவீதம் ஆகும். பாதுகாப்பு பட்ஜெட்டில் இத்தொகை 10 சதவீதம் ஆகும். கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பட்ஜெட்டில் இத்தொகை 45 சதவீதம் ஆகும்.

