முதலமைச்சர் ஸ்டாலினின் ஆடை விலை என்ற பெயரில் பொய் செய்தி பரப்பிய  சேலம் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துபாய் தமிழக அரங்கை திறந்து வைத்த முதல்வர்

மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாக தூபாய் கண்காட்சி உள்ளது. துபாய் நாட்டில், அக்டோபர் 1, 2021 முதல் தொடங்கி வருகிற மார்ச் 31, 2022 வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில், மார்ச் 25, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. இந்த கண்காட்சியை கடந்த 25 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து துபாய் நாட்டின் முதலீட்டாளர்களோடு ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்

துபாய் பயணம் மர்மம் என்ன?

இந்தநிலையில் முதலமைச்சர் துபாய் பயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து வந்தார். முதலமைச்சர் துபாய் செல்வதற்கு முன் அவரது குடும்பத்தினர் பல முறை துபாய் சென்று வந்ததாக கூறினார். தற்போது முதலமைச்சர் தனது குடும்பத்தோடு மீண்டும் துபாய் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார். எனவே துபாய் மர்மம் என்ன என கேள்வி எழுப்பியருந்தார். இதற்கு திமுக கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் பேசியிருப்பது, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளதாக கூறப்பட்டது. மேலும் இது தொடர்பாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லையென்றால் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாஜக நிர்வாகி கைது 

இந்தநிலையில் முதலமைச்சர் துபாய் பயணம் தொடர்பாகவும், முதலமைச்சர் உடையின் விலை குறித்தும் சமூக வலை தளம் மூலம் தவறான தகவல் பரப்பியதாக பாஜக சேலம் மாவட்ட எடப்பாடி பாஜக இளைஞர் அணி பொதுச்செயலாளர் அருண்பிரசாத் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சேலம் எடப்பாடி நகர போலீசார் அருண்பிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாஜக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.