அஞ்சாநெஞ்சன், தென்மண்டல அமைப்பு செயலாளர், தென் மாவட்ட அதிகார மையம் என அறியப்பட்ட மு.க.அழகிரி, உட்கட்சி பிரச்சனையால் கடந்த 2000 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அழகிரி நீக்கத்துக்கு அவரது ஆதரவாளர்களிடையே பலத்த எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அழகிரி 2001 ஆண்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மதுரை தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய ரசாயானம் மற்றும் உரத்துறை அமைச்சரானார்.

மத்திய அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை 2013 ஆம் ஆண்டு திமுக வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், திமுகவை கைப்பற்றும் போட்டியில் ஸ்டாலினுடன் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மதுரை நகர் நிர்வாக அமைப்பு 2014 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. அப்போது தலைமைக்கு எதிராக அழகிரி பேட்டி அளித்ததால் திமுக தலைவருடன் மனக்கசப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி முழுமையான ஓய்வில் இருந்து வருகிறார். அதனால் கட்சியைத் தலைமையேற்று வழி நடத்துவதற்காக மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். திமுகவின் செயல் தலைவராக இருக்கு மு.க.ஸ்டாலின் பற்றி அழகிரி அவ்வப்போது விமர்சித்து பேட்டி கொடுத்து வந்துள்ளார். திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காக மட்டுமே இருக்கின்றனர் என்றும் உண்மையான திமுகவினர் என் பக்கம்தான் உள்ளனர் என்றும் அவர் அவ்வப்போது கூறி வருகிறார். 

மு.க.ஸ்டாலின் செயல்படாத தலைவர் என்றும், செயல் தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை எந்த தேர்தலிலும் திமுக ஜெயிக்காது என்றும் திமுக வெற்றி பாதையில் செல்ல வேண்டுமென்றால் திமுகவில் மாற்றம் தேவை என்றும் மு.க.அழகிரி கூறி வருகிறார். மு.க.அழகிரி இன்று மதுரையில் பேசும்போது, செயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார் என்றும், செயல்படும் வீரர்கள் பாலமேட்டில் இருப்பதாகவும் அதாவது உண்மையான திமுக தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மு.க.அழகிரி பாஜகவில் சேரப்போவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறும்போது, அழகிரி பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றே தெரிவித்திருந்தார். கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத அழகிரியைப் பயன்படுத்தி திமுகவில் குழப்பம் ஏற்படுத்த பாஜக முயன்றால் அதை முறியடிக்கும் என்றும் திமுக நிர்வாகிகள் கூறி இருந்தனர். இந்த நிலையில், மு.க.அழகிரியை இயக்குவது பாஜகதான் என்று திமுக தரப்பில் இருந்து குரல்கள் எழுந்துள்ளன.