தமிழக மக்களின் வாழ்வாதாரமான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் பாஜக இங்கு ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது என்றும், எல்லா பிரச்சனைகளிலும் அதிமுக அரசு மத்திய அரசுடன் அட்ஜஸ்ட் பண்ணி போக முடியாது என்றும் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக ரயில் போராட்டங்களை நடத்தியது. நாளை அனைத்துக்கட்சி சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது

இந்நிலையில் மத்திய அரசைக் கண்டித்து ஆளும் அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் அங்கு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் பங்கேற்றுப் பேசினார். அப்போது தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜக இங்கு ஒரு ஓட்டுகூட வாங்க முடியாது என தெரிவித்தார்.

மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாகவே இருக்க விரும்புகிறது என்றும், இதே நேரத்தில் எல்லா பிரச்சனைகளிலும் அதிமுக அரசு மத்திய அரசுடன் அட்ஜஸ்ட் பண்ணி போக முடியாது என்றும் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.