இந்தியாவில் 223 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள், எம்.பி.க்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. பிரபல பாடகி கனிகா கபூர் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 

அந்த புகைப்படம் தற்போது அரசியல்வாதிகள் சிலருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏனென்றால் பாடகி கனிகாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிறன்று கனிகா பங்கேற்ற விருந்தில் பாஜகவின் முக்கிய தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே, அவரது மகன் எம்.பி. துஷ்யந்த் சிங், உத்தரப்பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். எனவே அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

எம்.பி. துஷ்யந்த் புதன் அன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்த பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்திருக்கிறார். தற்போது வசுந்தரா ராஜேவும், துஷ்யந்தும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

துஷ்யந்தை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் அனுப்பிரியா படேல், காங்கிரஸ் கட்சியின் ஜிதின் பிரசாத், தீபிந்தர் ஹூடா ஆகியோரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். துஷ்யந்த் சிங் நாடாளுமன்றத்திற்கும் வந்துள்ளார். அவரது அருகே அமர்ந்திருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. டெரிக் ஓ பிரைனும் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.