bjp contestant in rk nagar will be karu nagarajan says tamilisai soundarrajan
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பாஜக., சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளராக இருக்கும் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. திமுக., சார்பில் மருது கணேஷ், அதிமுக.,வின் சார்பில் மதுசூதனன், சுயேட்சையாக டிடிவி தினகரன் என்று ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்துவிட்டனர். இந்த நிலையில், ஆர்.கே.நகரில் தாங்களும் போட்டியிடுவதாக பாஜக., அறிவித்தது. ஆனால் இன்னும் பாஜக. தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், பாஜக,வுக்கு போட்டியிட வேட்பாளரே கிடைக்கவில்லை என்ற வகையில் கிண்டலும் கேலியுமாக செய்திகள் உலவின. இதை அடுத்து, தானே இந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதாக பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்ததாக செய்திகள் உலவின. ஆனால், தெரிந்தே மாநிலத் தலைமை ஒரு சிக்கலுக்குள் தன்னை இழுத்துக் கொள்ளுமா என்று பலரும் வினா எழுப்பினர்.
இந்த நிலையில் பாஜக வேட்பாளராக கரு.நாகராஜன் போட்டியிடுவார் என்று பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தில்லிக்கு இது குறித்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் இறுதி முடிவு தில்லியில் இருந்து எடுக்கப்பட்டு அறிவிக்கப் படும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
