ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வினர் உள்ளடி வேலையில் தொடங்கியுள்ளதால் அக்கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.

அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர் நயினார் நாகேந்திரன். இவர் கடந்த 2001 2006 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். பிறகு இவர் மீதான அதிருப்தி காரணமாக ஜெயலலிதா நயினார் நாகேந்திரன் ஓரம் கட்டி வைத்திருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் சீனியர் வீரர்களை கூப்பிட்டு சசிகலா பொறுப்புகளை கொடுத்தார். அந்த அடிப்படையில் நயினார் நாகேந்திரன் இருக்கும் அதிமுகவில் பொறுப்பு கிடைத்தது. ஆனால் மிக நேர்த்தியாக அந்தப் பொறுப்பை வைத்து பேரம் பேசி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு அங்கு முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக தற்போது வலம் வருகிறார் நயினார் நாகேந்திரன்.  

மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் மற்றும் பட்டுக்கோட்டை அருகே உள்ள கருப்பு முருகானந்தம் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. கருப்பு முருகானந்தம் பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். அதேபோல் கட்சியிலும் சீனியர். இதனால் கருப்பு முருகானந்தத்திற்கு ராமநாதபுரம் தொகுதியை வாங்கிக் கொடுக்க பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சி செய்தார். ஆனால் நயினார் நாகேந்திரன் பாஜக மேலிடத் தலைவர்கள் தொடர்பு மூலமாக ராமநாதபுரம் தொகுதியை தட்டிச் சென்றுவிட்டார். 

ஆனால் நயினார் நாகேந்திரனுக்கு ராமநாதபுரம் தொகுதி அவ்வளவு அறிமுகம் கிடையாது. ஆனால் அங்குள்ள அதிமுகவினரிடம் நயினார் நாகேந்திரன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். இந்த நம்பிக்கையில்தான் ராமநாதபுரம் தொகுதியை கேட்டு வாங்கி தற்போது களமிறங்கியுள்ளார் நயினார் நாகேந்திரன். ஆனால் தொகுதிக்கு புதியவரான நயினார் நாகேந்திரன் பாஜக தரப்பில் இருந்து பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பாஜக கோஷ்டிப்பூசல் புகுந்து விளையாடி கொண்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள். மேலும் தான் வெற்றி பெற்றுவிட்டால் அமைச்சர் ஆகிவிடுவேன் என்று நயினார் நாகேந்திரன் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார்.

 

இதனால் ஏற்பட்ட எரிச்சல் காரணமாகவே பாஜகவின் மிக சீனியர் ஒருவர் நயினார் நாகேந்திரன் எதிராக உள்ளடி வேலைகளில் தீவிரமாக செய்து வருவதாகவும் கூறுகிறார்கள். ஆனால் அதிமுகவில் இருக்கும் போதே இது போன்று பல உள்ளடி வேலைகளை தான் எதிர்கொண்டுள்ளதாகவும் இவற்றையெல்லாம் சமாளித்து ராமநாதபுரத்தில் வெல்வதோடு மட்டுமல்லாமல் மத்திய அமைச்சராகவும் பதவி ஏற்று காட்ட உள்ளதாக நயினார் நாகேந்திரன் சவால் விடுத்து வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது.