தமிழகத்துக்கு ஆள நினைக்காதீர்கள் என்று பாஜகவுக்கு மறைமுகமாகப் பதிலடி தந்திருக்கிறார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாஞ்சில் சம்பத், தமிழகத்தில் பாஜகவை 2 சதவீத வாக்கு வங்கி உள்ள கட்சி என்று விமர்சித்தார். அதற்குப் பதிலடி தந்த தமிழக பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன், “நாஞ்சில் சம்பத் 2 சதவீத கட்சி என்று பேசினார். ரொம்ப அவசரப்படாதீங்க. ஹரியாணாவில் 4 இடங்கள்தான் எங்களுக்கு இருந்தது. தற்போது 40 இடங்களுடன் ஆட்சியில் இருக்கிறோம். திரிபுராவில் ஓரிடம்தான் இருந்தது. ஆனால், இப்போது அங்கும் ஆட்சியில் இருக்கிறோம். பாஜக 4 சதவீதத்திலிருந்து 40 சதவீதத்துக்கு மாறுகிற கட்சி. நீங்கள் அதை பார்க்கத்தான் போகிறீர்கள். தமிழகத்திலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும்” என்று பேசினார்.


பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை ஆள நினைக்காதீர்கள் என்று மறைமுகமாகப் பேசினார். “தமிழகத்தில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு நல்லாட்சி நடத்தி வருகிறார் பச்சைத் தமிழன் எடப்பாடி பழனிச்சாமி. டெல்லியில் மோடியும் தமிழகத்திலும் எடப்பாடியும் இருக்க வேண்டும். நீங்க இங்க வர நினைக்காதீங்க. உங்களுக்கு ஒன்று என்றால் நாங்கள் உதவிக்கு வருவோம். எங்களுக்கு ஒன்று என்றால் நீங்கள் உதவுங்கள். இது அப்படியே போய்க்கிட்டே இருக்கட்டும்” என்று பேசினார்.
தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம் என்று பாஜக பொதுச்செயலாளர் சீனிவாசன் பேசியதற்கு தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரிடையாகப் பதில் பேசியது பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.