பாஜகவின் பி டீம்தான் அதிமுக என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்திருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறும்போது, “ஜனநாயகப்படி பாஜகவின் இந்த பட்ஜெட் 3 மாதத்திற்கானதாகதான் இருக்க வேண்டுமே தவிர ஓராண்டுகால பட்ஜெட்டாக இருக்கக்கூடாது. ஆனால்,  நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இந்த பட்ஜெட் போடப்பட்டு இருக்கிறது. 

விவசாயிகளை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை சலுகைகளாக அறிவித்து உள்ளது. ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வரி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தச் சலுகைகளை எல்லாம் வருகிற புதிய அரசுதான் நிறைவேற்ற வேண்டும். எத்தனை சலுகைகள் மோடி அறிவித்தாலும் இந்த அரசு தோல்வியுறும். 

தமிழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக அரசாங்கம் நரேந்திர மோடியின் நிழலாக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் பி-டீமாக அ.தி.மு.க. செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடியை அதிமுக ஆதரிக்கிறது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை  என்று வெளியோ சொல்கிறது.

இது இரட்டை வேடம். பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தையும் புதுவையையும் பா.ஜ.க. வஞ்சித்து வருகிறது” என்று நாராயணசாமி தெரிவித்தார்.