கள்ளத்தனமாக ஊடுருவி வந்தவர்களை நம்பித்தான் எதிர்காலத்தில் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்களோ என்று திமுகவை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் விமர்சித்துள்ளார். 
சிஏஏ சட்டத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றுவருகிறது. இதன்படி திமுக கூட்டணி கட்சிகள் பொதுமக்களைச் சந்தித்து சிஏஏ சட்டத்துக்கு எதிராக கையெழுத்து பெற்றுவருகிறார்கள். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாணவர்கள் உள்பட பல தரப்பினரை சந்தித்து கையெழுத்து வேட்டை நடத்திவருகிறார். இதுவரை 2 கோடி பேருக்கு மேல் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் திமுகவின் கையெழுத்து இயக்கத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.


அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன், மாணவர்களிடம் கையெழுத்து பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “இந்திய இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருப்பது வேறு. அன்னிய நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியர்களுக்கு ஆதரவாக ஒரு அரசியல் கட்சியே செயல்படுவது மிகவும் தவறு. கள்ளத்தனமாக ஊடுருவி வந்தவர்களை ஒரு வேளை வாக்காளர் பட்டியலில் அவர்களின் ஓட்டுகளை நம்பித்தான் எதிர்காலத்தில் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 
சிஏஏ-வால் பாகிஸ்தான், பங்களாதேஷிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் வந்த மக்களுக்கு பாதிப்பு வரக்கூடிய ஒரு விஷயத்தில்,  ஊடுருவி வந்தவர்களுக்காக ஒரு அரசியல் கட்சித் தலைவர் ஆதரவாக நாட்டு குடிமக்களை தூண்டி விடுவது தவறான செயல். ஒருவகையில் இது தேசத்தின் நன்மைக்கு எதிரானதும்கூட. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் இது போன்று அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடுவது தவறு. இதை அரசாங்கம் தடுக்க வேண்டும்” என்று இல. கணேசன் தெரிவித்துள்ளார்.