பீகாரில் 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.  ஆட்சி அமைக்க 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டு. தொடக்கத்தில் காங்கிரஸ் - ஆர்.ஜே.டி. கூட்டணி முன்னிலையில் இருந்தது. பிறகு பாஜக- ஜேடியூ முன்னிலை பெறத் தொடங்கியது. மாலைக்குப் பிறகு இரு கூட்டணிகளும் சமபலத்தில் இருந்தன. சுமார் 100 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 5 ஆயிரத்துக்குள் இருந்ததால், முடிவுகள் மாறிக்கொண்டே இருந்தன.


இதனால், இறுதியில் எந்தக் கூட்டணி வெல்லும் என்பதை ஊகிக்கவும் கடினமானது. இன்று அதிகாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதிகாலை 4 நிலவரப்படி ஆட்சி அமைக்கத் தேவையான 122 தொகுதிகளில் பாஜக-ஜேடியூ கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் அக்கூட்டணி 3 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தன. காங்கிரஸ் - ஆர்.ஜே.டி. கூட்டணி 110 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைப் பிடித்ததால் பாஜக- ஜேடியூ கூட்டணி ஆட்சி மீண்டும் அமைகிறது. ஏற்கவே பாஜக உறுதிமொழி அறிவித்தபடி நிதிஷ்குமார் முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி பீகாரில் பெற்ற வெற்றி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஜனநாயகத்தின் முதல் பாடத்தை பீகார் உலகிற்கு கற்றுத் தந்திருக்கிறது. பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற வாக்களித்த பெண்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.