அதிகாரப்பூர்வமாக மூன்று கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையிலும் கூட திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அதிகாரப்பூர்வமாக மூன்று கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையிலும் கூட திமுக – காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
உம்மன் சாண்டி தலைமையில் ஒரு முறையும், கே.எஸ்.அழகிரி தலைமையில் இரண்டு முறையும் காங்கிரஸ் குழு திமுகவை குழுவை சந்தித்து பேசியது. இந்த மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் காங்கிரஸ் கட்சி கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கிய தொகுதிகள் அப்படியே தேவை என்பதை வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்த மூன்று முறையும் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெளிவாக திமுக எடுத்துக்கூறியுள்ளது. கூட்டணியில் அதிக கட்சிகள் உள்ளதாக கூறி காங்கிரசுக்கான தொகுதிகளை கடந்த முறையை காட்டிலும் சரி பாதியாக குறைத்து கொடுக்க திமுக முன்வந்துள்ளது.

ஆனால் வெறும் 21 தொகுதிகளுக்காக கூட்டணியில் தொடர முடியாது என்று காங்கிரஸ் கருதுகிறது. திமுகவின் இந்த நிலைப்பாட்டை ஏற்கனவே காங்கிரஸ் மேலிடத்திடம் தமிழக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சோனியா காந்தி இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது 21 தொகுதிகள் தான் என்றால் காங்கிரஸ் தமிழகத்தில் திமுக கூட்டணியல் தொடர வேண்டியதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட இதே நிலையில் தான் காங்கிரஸ் தற்போதும் நீடிப்பதாக சொல்கிறார்கள்.
ஆனால் முடிந்த அளவிற்கு திமுகவுடன் உடன்பாட்டை ஏற்படுத்த முடியுமா என முயற்சிக்குமாறு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே உம்மண் சாண்டி உள்ளிட்டோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் வெறும் 21 தொகுதிகள் என்பதை தாண்டி வர மறுத்த காரணத்தினால் இனி உம்மன் சாண்டி போன்றோரை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. அதே சமயம் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இதே போல் தமிழகத்தில் தென் மாவட்டடங்களில் மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி வழக்கம் போல் மோடி, எடப்பாடி அரசை விமர்சிப்பதோடு நிறுத்திக் கொண்டார். திமுக கூட்டணிக்கு அவர் வாக்கு சேகரிக்கவில்லை. குறிப்பாக மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக அவர் எங்கும் முன் நிறுத்தவில்லை. இதற்கு காரணம் தொகுதி ஒதுக்கீட்டில் திமுக காட்டும் கறார் தன்மை தான் என்கிறார்கள். பிறந்த நாளன்று மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு ராகுல் பேசியுள்ளார். அப்போது பிறந்த நாள் வாழ்த்துகளோடு தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் ராகுல் ஸ்டாலினிடம் பேசியதாக சொல்கிறார்கள்.

இதனை தொடர்ந்தே கே.எஸ்.அழகிரிக்கு மறுபடியும் திமுக தரப்பிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு சென்றுள்ளது. இந்த முறை திமுக நிச்சயமாக இறங்கி வந்துவிடும் என்கிற எதிர்பார்ப்போடு கே.எஸ்.அழகிரி அறிவாலயம் சென்றார். ஆனால் பழைய குருடி கதவை திறடி என்பது போல் திமுக மறுபடியும் அதே 21 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்றே பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது- காங்கிரஸ் தரப்பில் தாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை சுட்டிக்காட்டி 41 தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த முறை அதற்கு வாய்ப்பு இல்லை என்று திமுக குழு மறுபடியும் கூறியுள்ளது.

இதனால் தான் பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி , தொகுதிப் பங்கீட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறியுள்ளார். அத்தோடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும் என்கிற நம்பிக்கை அவரது பேச்சில் சுத்தமாக இல்லை. இதற்கு காரணம் இந்த முறை 180 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பது தான் என்கிறார்கள். இந்த முடிவில் இருந்து ஸ்டாலின் பின்வாங்காத வரை காங்கிரசுக்கு 21 தொகுதிகளுக்குமேல் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்கிறார்கள்.
