கேரளாவில் ஒருபுறம் பறவைக்காய்ச்சல் மறுபுறம் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் உயிர் பயத்தில்  மூழ்கியுள்ளனர்.  ஆனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மாநில சுகாதாரத்துறை மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறது . அதே நேரத்தில் கேரளாவில் பாலக்காடு திருவனந்தபுரம் பகுதிகளில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.   பறவைக் காய்ச்சல் காரணமாக  மரத்திலிருந்து   பறவைகள்  கொத்து கொத்தாக செத்து விழுந்தன.   இது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.  பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் பறவைகளை பாதுகாப்பாக அழிக்கும் பணியை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது . 

 

பாலக்காடு பகுதிக்கு தமிழகத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வாத்துக் குஞ்சுகள் கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தது . இது  மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது . இது குறித்து தகவலறிந்த  கால்நடை பாதுகாப்புத்துறை  அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த வாத்துக் குஞ்சுகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை ஆரம்பித்துள்ளனர் .  இறந்த வாத்து குஞ்சுகள் பாதுகாப்பான முறையில்  குழிகளில்போட்டு  எரிக்கப்பட்டன .  இதற்கிடையில் திருவனந்தபுரத்தில் எம்எல்ஏ விடுதி அருகே மரத்திலிருந்த பறவைகள் திடீரென கோத்துகொத்தாக மயங்கி விழுந்தன.  இதை அறிந்த மருத்துவ குழுவினர் வந்து இறந்த  பறவைகளை ஆய்விற்காக கொண்டு சென்றனர் . 

தீயணைப்புத்துறையினர் வந்து மீதமிருந்த பறவைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர் .  அதேநேரத்தில் கோழிக்கோடு முக்கம் பகுதியில் வவ்வால்கள் கூட்டம் கூட்டமாக செத்து விழுந்தன இதனையறிந்த  கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் இறந்த வவ்வால்களை ஆய்விற்காக கொண்டு சென்றனர் .  அதேநேரத்தில் திருவனந்தபுரம் மலைப்பகுதியில் குரங்குகள் திடீர் திடீரென மயங்கி விழுந்தன.  இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது , உடனே தகவலறிந்த வந்த வனத்துறையினர் சம்பவ இடம் சென்று குரங்குகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.  பறவைகளும் விலங்குகளும் கேரளாவில் கொத்துக்கொத்தாக மயங்கி விழுவது கேரள மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .