மூணாறு மண் சரிவு விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் கேரள அரசு பாகுபாடு காட்டுவதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார், அதில் கூறியிருப்பதாவது:-மூணாறு அருகே தோட்டத்தொழிலாளர்கள் குடியிருப்பில் மீது மண் சரிவு ஏற்பட்டு 43 தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், 28 தமிழர்களின் நிலை என்னாயிற்று என்பது தெரியவில்லை.

துயரம் மிகுந்த இந்த நிகழ்ச்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் உறவினர்கள் பலர் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்கள் அங்கு செல்வதற்கும், இறந்தவர்களின் உடல்களைப் பெற்று சொந்த ஊர்களுக்குக் கொண்டுவந்து அடக்கம் செய்வதற்குமான உதவிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வரை வேண்டிக்கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 இலட்சம் அளிப்பதாக கேரள முதல்வர் அறிவித்திருக்கிறார். 

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களுக்கு ரூபாய் 20 இலட்சம் அளிக்கப்படுமென அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.  மூணாறில் உயிரிழந்தவர்கள் தமிழர்கள் என்பதால், இத்தகைய பாகுபாடு காட்டப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இறந்த தமிழர்களின் குடும்பங்களுக்கும் ரூபாய் 20 இலட்சம் வழங்குமாறு கேரள முதல்வரை வேண்டிக்கொள்கிறேன்.என அதில் கூறப்பட்டுள்ளது.