’தமிழகத்திற்கு இரு மொழி தன் வீட்டிற்கு மும்மொழியா?’என கனிமொழிக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, `மெட்ரோ' பட நடிகர் சிரிஷ் இருவரும் `I am a தமிழ் பேசும் Indian', `இந்தி தெரியாது போடா' என்ற வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட்களை அணிந்திருந்த புகைப்படங்களை அண்மையில் அவர்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். அந்தப் படங்கள் அடுத்த சில நிமிடங்களில் செம வைரல் ஆகவும், `இந்தி தெரியாது போடா' என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆகத் தொடங்கியது. பலரும் தொடர்ந்து பதிவுகளை இந்த ஹேஷ்டேக்கில் பதிவிடவே, அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.


அடுத்தடுத்து பிரபலங்கள் பலரும், `இந்தி தெரியாது போடா' டி-ஷர்ட் அணிந்த படங்களைப் பகிர ஆரம்பித்தனர். நடிகர் சாந்தனு - கீர்த்தி தம்பதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களின் டி-ஷர்ட் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில், தி.மு.க எம்.பி கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில், ``ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல" என்று ஞாயிறு இரவு குறிப்பிட்டிருந்தார். 

இந்த விவகாரத்தை விடாமல் கருத்து சொல்லி வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘’முதலில் சிஷ்யா அடையாரிலும் பின்பு வித்யா மந்திரியும் தன் மகன் ஆதித்யா (தமிழ் பெயர்) வை இந்தி மற்றும் சமஸ்கிருதம் படிக்க வைத்து விட்டு தமிழ் வேடமா. தமிழகத்திற்கு இரு மொழி தன் வீட்டிற்கு மும்மொழியா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்