பீகார் மாநில சட்டப்பேரவை 3ம் கட்ட தேர்தலில் 54.17 சதவீத ஒட்டுப்பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பரபரப்பு கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 3-ம் தேதியும் நடைபெற்றது. இந்நிலையில், 3ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நிறைவு பெற்றது. 3ம் கட்ட தேர்தலில் 54.17 சதவீத ஒட்டுப்பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் பீகாரில் அடுத்து யார் ஆட்சி அமைப்பர் என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில், பாஜக+ஜேடியூ கூட்டணிக்கு 116 இடங்களும், ஆர்ஜேடி+காங்கிரஸ் கூட்டணிக்கு 120 இடங்களும் கிடைக்கும் என  டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ABP கருத்து கணிப்பில் பாஜக+ஜேடியூ கூட்டணிக்கு 104 முதல் 128 இடங்களும், ஆர்ஜேடி+காங்கிரஸ் கூட்டணிக்கு 108 முதல் 131 இடங்களும், லோக் ஜன சக்தி 1 முதல் 3 இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 

ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பில் பாஜக+ஜேடியூ கூட்டணிக்கு 91 முதல் 117 இடங்களும், ஆர்ஜேடி+காங்கிரஸ் கூட்டணிக்கு 118 முதல் 138 இடங்களும், லோக் ஜன சக்தி 5 முதல் 8 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் முதல்வராக தேஜஸ்விக்கு 44 சதவீதம் பேரும், நிதிஷ்குமாருக்கு 35 சதவீதம் பேரும் , சிராக் பஸ்வானுக்கு 7 சதவீதம் பேரும் பாஜக தலைவர்களில் ஒருவரான சுசில்குமார் மோடிக்கு 3 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.