பீகார் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கின. தொடக்கத்தில் ஆர்.ஜே.டி., காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்த நிலையில், 10 மணிக்கு பிறகு பாஜக-ஜேடியு கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பாஜக கூட்டணி 130 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்தன. ஆனால், மதியத்துக்குப் பிறகு முன்னிலை நிலவரம் மீண்டும் மாறத் தொடங்கின. ஆர்.ஜே.டி, காங்கிரஸ் கூட்டணியின் முன்னிலை நிலவரம் கூடின.


பீகாரில் இரு கூட்டணிக்கு இடையே கடும் இழுபறி நீடித்துவருகிறது. இரு கூட்டணிகளுக்கும் இடையே 31 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலை நிலவரம் உள்ளது. இதேபோல 101 தொகுதிகளில் இரு கூட்டணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இதனால், நிமிடத்துக்கு நிமிடம் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டே உள்ளது.
ஆட்சியமைக்க 122 எம்.எல்.ஏ.க்கள் போதும் என்ற நிலையில் இரவு 10 மணி நிலவரப்படி பாஜக-ஜேடியூ கூட்டணி 123 தொகுதிகளில் முன்னிலை/வெற்றி பெற்றுள்ளது. ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் கூட்டணி 113 தொகுதிகளில் முன்னிலை / வெற்றி பெற்றுள்ளது. நிமிடத்துக்கு நிமிடம் நிலவரங்கள் மாறுவதால், பீகார் அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.