திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கைது விவகாரத்தில், தலித்துகளை வைத்து திமுக கூட்டணியை சிதறடிக்கும் வேலையை அதிமுக - பாஜக செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்.பி.யும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ். பாரதி, நீதிபதிகள் பதவி குறித்து பேசும்போது, “அது தலித்துகளுக்கு திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பேசிய பேச்சு சர்ச்சையானது. அந்தப் பேச்சு தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 100 நாட்கள் கடந்து அந்த வழக்கில் ஆர்.எஸ். பாரதியை போலீஸார் இன்று கைது செய்தனர். பாரதியின் கைதுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

 
இந்த நடவடிக்கைக்கு விசிக தலைவர் திருமாவளவன் என்ன வினையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே ஆர்.எஸ். பாரதி பேசிய பேச்சுக்கு மென்மையாகவே திருமாவளவன் கண்டித்ததாக விமர்சனம் எழுந்தது. இதேபோல ‘நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா’ என்று தயாநிதி மாறன் பேசிய விவகாரத்திலும் அதிர்ச்சி தெரிவித்து தோழமையோடு சுட்டிகாட்டுகிறோம் என்று திருமாவளவன்  தெரிவித்திருந்தார். திருமாவளாவனின் இந்தக் கருத்துகளை வைத்து சமூக ஊடங்களில் அதிமுக, பாஜகவினர் கடுமையாக விமர்சித்தார்கள். குறிப்பாக பாஜக இந்த விவகாரத்தில் திருமாவளவனை கடுமையாக விமர்சித்துவருகிறது. இதேபோல முரசொலி நில விவகாரத்தில் திமுகவோடு சேர்ந்து திருமாவளவனும் விமர்சிக்கப்பட்டார்.


திமுக தலித்துகளுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயலுவதாகவும் திமுகவினர் குற்றம் சாட்டிவருகிறார்கள். முரசொலி நிலம், தயாநிதி மாறன் பேச்சு, வி.பி.துரைசாமியின் நீக்கம் போன்றவற்றை பாஜக இந்த விவகாரங்களுக்குப் பயன்படுத்திக்கொள்வதாகவும் கூறப்பட்டுவருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஆர்.எஸ். பாரதியின் கைதில் திருமாவளவனின் கருத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த கைது விவகாரத்தில் அதிமுக, பாஜக என இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துள்ள திருமாவளவன், திமுக கூட்டணியைச் சிதறடிக்க இதுபோன்ற  தலித் விஷயங்களைப் பயன்படுத்துவதாக வெடித்துள்ளார்.
 “வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல்பகைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தலித் மக்களின் மீதான அக்கறையா? அல்லது அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையா? என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்! திமுக கூட்டணியைச் சிதறடிக்கும் அரசியல் விளையாட்டில் தலித் மக்களை பகடைக் காயாகப் பயன்படுத்துவதா? தேசிய ஆணையத்தையும் இதற்காக பாஜக அரசு பயன்படுத்துவது நியாயமா? சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில், திமுகவையும், அதிமுகவையும் பலவீனப்படுத்தாமல் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பது பாஜகவுக்குத் தெரியும். இந்நிலையில், அதிமுகவை முழுமையாகத் தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கும் பாஜக, திமுகவைப் பலவீனப்படுத்துவதையே முதன்மையான செயல்திட்டமாக வரையறுத்துக் கொண்டு, அரசியல் உள்நோக்கத்தோடுதான் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.” என்று திருமாவளவன் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
திமுக எம்.பி.க்களின் இந்தப் பேச்சுகளால் தேவைற்ற சர்ச்சைகள் ஏற்படுவதாக விசிகவினர் ஏற்கனவே வருத்தத்தில் இருந்தனர். திமுக கூட்டணியிலிருந்து திருமாவளவனை வெளியேற்ற இதுபோன்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுவதாகவும்கூட விசிகவினர் மத்தியில் பேச்சு எழுந்தது. இந்நிலையில் ஆர்.எஸ். பாரதி கைது விவகாரத்தில், அதை வெளிப்படுத்தும் வகையில் திருமாவளவன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.