தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காகவே மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்பியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் தேர்தல், மே 19 அன்றுடன் முடிவடைகிறது. மே 23 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்போம் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது. ஆனால், பாஜக கூட்டணிக்கு 200-க்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் குழப்பமாகவே வெளிவந்துள்ளன. பாஜக மெஜாரிடிக்குக் குறைவாக எவ்வளவு இடங்களைப் பிடித்தாலும், அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்கும் வேலையில் காங்கிரஸ் இறங்கியுள்ளது.


அந்தப் பணியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியே களமிறங்கியுள்ளார். உடல்நிலை பாதிப்பு, ராகுலுக்கு வழிவிடுவதற்காகவும் தீவிர அரசியலில் இருந்து சோனியா காந்தி விலகினார். தற்போது மோடி ஆட்சி மீண்டும் அமையக் கூடாது என்பதற்காக மீண்டும் அவர் களமிறங்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில்தான் மே 23 அன்று காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள கூட்டத்துக்கு ராகுலை தவிர்த்து சோனியா சார்பில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.


ராகுலை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தபோதும், அதை பிற எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவும் இல்லை. ராகுலை பிரதமராக முன்னிறுத்தினால், பிற கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதை காங்கிரஸும் உணர்ந்துள்ளது. வயதில் இளையவரான ராகுல் எடுக்கும் முயற்சிகளுக்கு தலைவர்கள் முட்டுக்கட்டை போடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையாலும் சோனியா காந்தியே அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இரண்டு முறை ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக சோனியா காந்திதான் இருந்தார். சோனியா காந்தி மீது பல கட்சித் தலைவர்களும் மதிப்பு வைத்திருப்பதால், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஒவ்வொரு எதிர்க்கட்சியுடனும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் சோனியா காந்தியின் ஆலோசனையில் பேசிவருவதாகவும்  கூறப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதாதளத் தலைவருமான நவீன் பட்நாயக்குடன் காங்கிரஸ் மூத்த தலைவரும் ம.பி. முதல்வருமன  கமல்நாத் பேசிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மு.க. ஸ்டாலினை தவிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அஹமது படேல் ஆகியோர் சந்திரசேகர ராவ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாயாவதி, அகிலேஷ் ஆகியோருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தைககளைத் தொடங்கியிருப்பதாகவும் பேசப்படுகிறது. மம்தாவுடன் சந்திரபாபு நாயுடு பேசிவரும் நிலையில், மே 19-க்கு பிறகு சோனியா காந்தி பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தொடங்கியிருக்கும் வேளையில் சோனியா தீவிர அரசியலுக்குத் திரும்பியிருப்பதும் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.