கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசினார். அப்போது தமிழகத்தை திராவிட கட்சிகள் நாசம் செய்துவிட்டதாக வழக்கம் போல் ராமதாஸ் குற்றஞ்சாட்டி பேசினார். மேலும் ஆளும் கட்சியான அ.தி.மு.கவும் சரியில்லை – எதிர்கட்சியான தி.மு.கவும் சரியில்லை என்று ராமதாஸ் தனக்கே உரிய பாணியில் விளாசினார். 

மேலும் சூரியனாக இருந்தாலும் சரி இலையாக இருந்தாலும் சரி பா.ம.க கூட்டணிக்கு தயாராக இல்லை என்றும் ராமதாஸ் வெளிப்படையாக அறிவித்தார். ராமதாசின் பேச்சை யாரும் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால் ராமதாஸ் இன்று ஒன்று பேசுவார் மறுநாளே தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார் என்பதால் அதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஆனால், மறுநாள் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது கூறிய சில கருத்துகள் தான் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணியிடம், தி.மு.க மற்றும் அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லை என்று ராமதாஸ் அறிவித்திருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. தனது தந்தையான ராமதாஸ் பேச்சை மறுத்து அன்புமணி பேசமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அன்புமணியோ கூட்டணி குறித்தெல்லாம் தேர்தல் சமயத்தில் தான் பா.ம.க முடிவெடுக்கும், தற்போதைக்கு கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தடாலடியாக தெரிவித்தார். அன்புமணியின் இந்த பேட்டி தான் தி.மு.கவை யோசிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக தனித்து போட்டி என்று கூறும் அன்புமணி கூட கூட்டணி விவகாரத்தில் இறங்கி வந்துவிட்டதாகவே தி.மு.க கருதுகிறது.

வட மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் பா.ம.கவிற்கு மிக கணிசமான அளவில் வாக்கு வங்கி உள்ளது. எனவே வட மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் பா.ம.கவுடன் கூட்டணி என்று வெளிப்படையாகவே தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் அன்புமணியின் பேட்டி ஸ்டாலினை யோசிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அவசரப்பட்டு தொகுதி ஒதுக்கீட்டில் அவசரம் காட்ட வேண்டாம் என்பதால் தான் ம.தி.மு.க மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை தி.மு.க சுத்தலில் விட்டுள்ளதாக கூறப்படுகிறது.