பேச்சிலும் செயலிலும் முதல்வராக நடந்துகொண்டார்.. முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டித் தள்ளிய அண்ணாமலை..!
முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பேச்சில், செயலில் முதல்வராக நடந்துகொண்டார். இதற்காக ஒரு தமிழனாக நாம் பெருமைப்பட்டோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கும்ம் முதல்வருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக நேற்று மாலை பிரதமர் மோடி சென்னக்க்கு வருகைத் தந்தார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா முடிந்ததும், பிரதமர் மோடி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தங்குவதற்காக சென்றார். இன்று நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல். முருகன், மாநில அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்த பிரதமர் மோடியை பாஜக நிர்வாகிகள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று இரவு சந்தித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு அண்ணாமலை தொடர்ந்து பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "பாஜகவின் மூத்த நிர்வாகிகள், ஜனசங்கம் காலம் தொடங்கி பணியாற்றும் நிர்வாகிகள் பிரதமரை சந்தித்தனர். இச்சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை. தற்போது அரசியல் பேசுவதற்கு தமிழகத்தில் தேர்தல் எதுவும் நடக்கவில்லை. தகுந்த நேரம் வரும்போது அரசியல் பேசுவோம். இன்று அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை.” என்றார் அண்ணாமலை.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் லோகோ சதுரங்க குதிரைக்கு தம்பி என்று எதற்கு பெயர்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் இணக்கமாக இருந்தார். அதனால், திமுக - பாஜக கூட்டணிக்கு வாய்ப்பு உண்டா என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “பாஜக ஒரு கொள்கை ரீதியான கட்சி. எங்களுடைய கொள்கையை பாஜக எப்போதும் மாற்றிக் கொள்ளாது. கடந்த முறை பிரதமர் சென்னை வந்தபோது நடந்த சம்பவங்களை வைத்து முதல்வர் பெரிய மனதோடு நடந்துகொண்டிருக்க வேண்டும். அரசு விழா என்பது அரசியல் பேசும் களம் கிடையாது. இப்போது நான் முதல்வரை பாராட்டுகிறேன். செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இந்தியாவின் கலாச்சாரத்தையும் பெருமையையும் பறைசாற்றும் விதமாக தமிழக அரசு பயன்படுத்திக் கொண்டது.
செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் முதல்வர் நடந்துகொண்ட விதத்துக்கு எங்களின் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம். முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் தமிழக பாஜகவின் தனிப்பட்ட பாராட்டுக்களையும் தெரிவிக்கிறோம். ஒரு நிகழ்ச்சியை நன்றாக செய்துள்ளார்கள் என்பதை பாராட்டியதற்காக கூட்டணி என்றெல்லாம் எதுவும் கிடையாது. கூட்டணி என்ற பேச்சே இல்லை. முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பேச்சில், செயலில் முதல்வராக நடந்துகொண்டார். இதற்காக ஒரு தமிழனாக நாம் பெருமைப்பட்டோம்” என்று பதில் கொடுத்தார்.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு செஸ் விளையாட்டுடன் வரலாற்றுத் தொடர்பு உள்ளது.. தமிழர் பெருமையை பரைசாற்றிய மோடி.
முன்னதாக செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா குறித்து அண்ணாமலை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “1967ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழர்களின் கலாச்சார சிறப்பும், பெருமையும், ஆன்மீக வழித்தடத்தையும் இனியும் மறைத்திட இயலாது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது #ChessOlympiad வரவேற்பு நிகழ்ச்சி. இச்சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சியை வழங்கிய தமிழக முதல்வருக்கு பாராட்டுக்களும், நன்றியும்." என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: சென்னை செஸ் ஒலிம்பியாட்.. மாஸ் காட்டும் மு.க. ஸ்டாலின்.. மாநில முதல்வர்கள் வரிசையாக வாழ்த்து.!