இந்தியாவில் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2064 பேரும் அதற்கடுத்தபடியாக தமிழ்நாட்டில் 1173 பேரும் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1154 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மூன்று மாநிலங்கள் தான் கொரோனா பாதிப்பில் டாப்பில் உள்ளன. 

ஆரம்பத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்துகொண்டிருந்த கேரளாவில் கடந்த 10 நாட்களாக பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக வெகு சிலர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தாலும் தடுப்பு நடவடிக்கைகளும் அதற்கேற்ப மும்முரமாக முழு வீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்புவரை குறைவான எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், நேற்று 1100 பேருக்கும் இன்று 2000க்கும் அதிகமானாருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல கொரோனா பாதிப்பு உள்ள 34 மாவட்டங்களிலும் கண்காணிப்பும் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு தான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், வூஹானில் மட்டும் கொரோனா இருந்த சமயத்திலேயே, அதாவது இந்தியாவிற்குள் கொரோனா பரவ ஆரம்பிக்காத சமயத்திலேயே, தமிழ்நாட்டில் ஏர்போர்ட்டுகளில் பரிசோதனை செய்வது, மருந்துகள், மாஸ்க்குகளை கொள்முதல் செய்வது ஆகிய பணிகளை நாம் தொடங்கிவிட்டோம்.

தமிழ்நாட்டில் 3371 வெண்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. அதேபோல 3 அடுக்கு மாஸ்க்குகள், என்95 மாஸ்க்குகள் ஆகியவையும் போதுமான அளவிற்கு இருப்பு உள்ளன. எனவே கொரோனா தடுப்பு பணிகளை மற்ற மாநிலங்களுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டோம். அந்தவகையில், தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலம். 

ரேபிட் டெஸ்ட் கிட் என்பது மானிட்டர் செய்வதற்கான கிட் தானே தவிர, பிசிஆர் கிட் மூலம் தான் தெளிவான முடிவை பெற முடியும். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு 10 ஆயிரம் பிசிஆர் கிட்களை வழங்கியது. தமிழ்நாடு அரசு சார்பில் தனியாக 14 ஆயிரம் பிசிஆர் கிட்களை ஆர்டர் செய்து வாங்கியுள்ளோம். மேலும் கூடுதலாக இன்னும் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. 

கொரோனா பரிசோதனை மையங்களுக்கும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. 25 அரசாங்க பரிசோதனை மையங்கள் மற்றும் 9 தனியார் மையங்கள் என மொத்தம் தமிழ்நாட்டில் 34 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரையும் கண்டுபிடித்து கண்காணிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டுகள் எவை, எங்கெல்லாம் அதிகமான பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது, அதிகபட்சமாக எத்தனை படுக்கை வசதிகள் தேவை என்பன போன்ற பல விஷயங்களை தொலைநோக்கு பார்வையுடன் ஆராய்ந்து அதுதொடர்பாக ஆலோசனை நடத்தி அதற்கான நடவடிக்கைகளுக்கு தயாராகிவருவதாக பீலா ராஜேஷ் தெரிவித்தார்.