தமிழகத்தில் புயல் கரையை  கடந்தாலும், வட மாவட்டங்களில்  கனமழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த தமிழகத்தையும் பீதியில் உறையவைத்த நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5:30 மணிக்கு கரையை நோக்கி 16 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது.இதன் காரணமாக சென்னை,கடலூர், திருவண்ணாமலை,காஞ்சிபுரம்,விழுப்புரம்,வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. 

புதுவை மற்றும்  காரைக்காலிலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே கரையை கடந்தது. அப்போது நிவர் புயலானது 120 கிலோ மீட்டர் முதல்  140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. அப்போது காற்றுடன் கனமழை அடித்து நொறுக்கியது. இதனைத் தொடர்ந்து புயலின் நகர்வை கூர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்த தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறுகையில், இரவு 11:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை புயல் கரையை கடந்தது என்றும், நீண்ட நேரம் தமிழகத்தின் நிலப்பகுதியில் அது மையம் கொண்டிருந்ததாகவும் கூறினார். புயல் தாக்கத்தினால் காற்று மழை தொடரும் எனவும் கூறியிருந்தார். தமிழகத்தின் வடமாவட்டங்களில் புயல் கடந்திருந்தாலும் கனமழை தொடரும் எனவும் அவர் கூறினார். புயல் வலுவிழந்தாலும் அதிக அளவு கனமழையை தரும் என கூறினார்.