இந்த இடங்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்திருந்தால், அதில் 50% இடங்கள், அதாவது 440 இடங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இப்போது கிடைத்துள்ள இடங்களை அளவீடாக கொண்டால், 440 இடங்கள் கிடைக்க வேண்டியதற்கு பதிலாக 33 இடங்கள் மட்டும் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கக்கூடும். இதை விட பெரிய சமூக அநீதி இருக்க முடியாது.
மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர் சேர்க்கையில், அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 9550 இடங்களில், வெறும் 371 இடங்கள் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர் சேர்க்கையில், அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 9550 இடங்களில், வெறும் 371 இடங்கள், அதாவது 3.80% இடங்கள் மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்துள்ளன. இது மிகப்பெரிய சமூக அநீதி. இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 5ஆம் தேதி நடத்தப்பட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைந்த முதற்கட்ட கலந்தாய்வில் 9550 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒட்டுமொத்தமாக 371 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த இடங்களையும் அவர்கள் பொதுப்பிரிவில் போட்டியிட்டுதான் வென்றுள்ளனர். இது முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்ட ஒட்டுமொத்த இடங்களில் 3.8 விழுக்காடு மட்டுமே ஆகும். பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகிய பிரிவுகளுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீடு இல்லாத பொதுப்பிரிவினர் 7125 இடங்களை, அதாவது 74.60 விழுக்காடு இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். இவர்களுக்கெல்லாம் மேலாக உயர்வகுப்பைச் சேர்ந்த ஏழைகள் பிரிவுக்கு 10 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றில் சுமார் 7%, அதாவது 653 இடங்கள் இதுவரை நிரப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

