வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று  முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்கள் மறியல் நடத்தப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக  கண்டனப்பேரணி நடைபெற்றது. 

குஜராத்தில் முழு அடைப்பு காரணமாக பொது மக்கள் சாலைகளில் டயர்களை எரித்து போக்குவரத்தை முடக்கியுள்ளனர், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட அனைத்து வட மாநிலங்களிலும் போராட்டம் தீவிரமாக  நடைபெற்று வருகிறது

ஆந்திர பிரதேசத்தில் சிபிஐ (எம்) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒடிசாவில் காங்கிரஸ் கட்சியினர் சம்பல்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் எதிர்க்கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோ வேன்களும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இன்று பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இந்த முழு அடைப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. மணல் லாரிகளும் இயக்கப்படவில்லை. 

தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளான தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

பெங்களூரு செல்லும் தமிழக பேருந்துகள் ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் செல்லும் தமிழக பேருந்துகள் களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரிய அளவு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகின்றன. சில இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன.  தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.