Banwarilal prohith sworn in as a new governer of tamilnadu today
தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள, பன்வாரிலால் புரோஹித், இன்று காலை, 9:30 மணிக்கு, சென்னை, கிண்டி கவர்னர் மாளிகையில், புதிய கவர்னராக பொறுப்பேற்கிறார்.
கடந்த ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு முன்பு தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, மஹாராஷ்டிரா கவர்னர், வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர் பதவியை, கூடுதல் பொறுப்பாக கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவு, அதிமுக மற்றும் தமிழக அரசியலில் குழப்பம் என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்த வித்யா சாகர்ராவ், தமிழக எதிர் கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார்.
இதையடுத்து தமிழகத்துக்கு முழு நேர புதிய கவர்னர் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்தநிலையில் தமிழகத்திற்கு முழு நேர கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டு உள்ளார். அதைத் தொடர்ந்து, பொறுப்பு கவர்னர் பதவியிலிருந்து, வித்யாசாகர் ராவ் விலகினார்.
நேற்று காலை, தமிழக அரசு சார்பில், அவருக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. காலை, 9:30 மணிக்கு, அவர், தனி விமானத்தில், மும்பை சென்றார்.
அதே நேரத்தில் நேற்று பகல் 1:30 மணிக்கு, , புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள , பன்வாரிலால் புரோஹித், பெங்களூரிலிருந்து சென்னை வந்தார். அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் புதிய கவர்னரை வரவேற்றனர். காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின், புரோஹித், ராஜ்பவன் புறப்பட்டுச் சென்றார். கிண்டி, ராஜ்பவன் முன், ஆறு குதிரை வீரர்கள் அணிவகுத்து நின்று, கவர்னரை வரவேற்றனர்.
இந்நிலையில் இன்று காலை, 9:30 மணிக்கு, ராஜ்பவனில் புதிய கவர்னர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சென்னை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
