ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் அமையப்பெற்றுள்ள , பிரசித்தி பெற்ற பன்னாரி அம்மன் கோயில், குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று  தீ மிதித்தனர்.

ஈரோடை அடுத்த சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள அருள்மிகு பன்னாரி அம்மன் கோவிலில்ஆண்டுதோறும் பங்குனிமாதம் திருவிழாநடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த ஒன்றாம் தேதி, இரவு குண்டத்திற்கு தேவையான எரிகரும்பு வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று, குண்டத்திற்கு தேவையான வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்களை வெட்டி வந்து கோயிலின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள  குண்டத்தின் அருகே அடுக்கினர்.

இந்நிலையில், குண்டம் இறங்குவதற்கு வசதியாக, 20 கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்ட தடுப்புகளில், கடந்த ஒருவாரகாலமாக பக்தர்கள் காத்திருந்து, கோயில் வளாகத்தில் தீச்சட்டி எடுத்தும்,  அலகு குத்தியும், வேல் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் குண்டத்தில் விறகுகள் அடுக்கப்பட்டு தீயிடப்பட்டது. அதிகாலை, 2:00 மணி முதல் ஊர்பெரியவர்கள் மூலம் சுமார், 10 அடி நீளம் 4 அடி அகலம் கொண்ட குண்டத்தை தயார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, அதிகாலை 3:00 மணிக்கு வாத்தியங்கள் முழங்க, அம்மன் சப்பரம் கோயில் மேற்குப்பகுதியில் உள்ள தெப்பக்குளத்திற்கு சென்று, அம்மன் அழைப்பு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சரியாக, 3:45 மணிக்கு அம்மன் சப்பரம் மற்றும் படைக்கலத்துடன் குண்டத்தை வந்தடைந்தது. குண்டத்தை சுற்றி கற்பூரம் வைத்து சிறப்புபூஜைகள் நடைபெற்றன..

இதைத் தொடர்ந்து  கோயில் பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள், வரிசையில் காத்திருக்கும்  பக்தர்கள்  உள்ளிட்டோர் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். குண்டம் இறங்கும் பக்தர்கள், கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அம்மனை தரிசித்தபடி சென்றனர்.