வங்கதேசத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ரசாயனக் கிடங்கு ஒன்றும் செயல்பட்டு வந்தது. ரசாயன பொருட்களில் ஏற்பட்ட தீ அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. இதில் குடியிருப்பு வாசிகள் தீயில் சிக்கி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் வெளியேற முடியால் உள்ளே சிக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குடியிருப்பு வளாகம் இருந்த குறுகிய வீதியில் இருப்பதால் தீயணைப்பு வாகனங்கள் அங்கு வருவதில் தாமதம் ஏற்பட்டதால் தீ மளமளவென அனைத்து இடங்களில் பரவியது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த 200 தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கேஸ் சிலிண்டரில் இருந்து கசிந்த கேஸ், ரசாயன பொருட்கள் மீது பட்டதே தீ விபத்து ஏற்பட காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.