பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை  பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் அதிரடி காட்டியுள்ளனர், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

சென்னை பள்ளிக்கரணை சாலையில் பணி முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததில் நிலை தடுமாறி சாலையில் சரிந்தார்,  பின்னால் வந்த லாரி அவர்மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தார் சுபஸ்ரீ. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் மற்றும் பேனர் அச்சிட்டு கொடுத்தவர்கள்  மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் பேனர் வைக்க காரணமாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலரை விட்டுவிட்டு லாரி டிரைவரையும்,  பேனர் அச்சிட்டவரையும் கைது செய்வது நியாயமல்ல என்று பொதுமக்கள் விமர்சித்ததுடன், பேனர் வைக்க காரணமாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை கைது செய்ய வேண்டும் என வலுவாக கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து ஜெயகோபால் தலைமறைவானார், இந் நிலையில் போலீசார் அவரை கைது செய்வதற்கு மாறாக  அவருக்கு உடல் நிலை சரியில்லை,  அவரை தேடி வருகிறோம் என்று  பல காரணங்களை கூறி வந்தனர்.

 

ஜெயகோபால் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால்தான் அவரை போலீசார் கைது செய்ய தயங்குகின்றனர் எனவும், லாரி டிரைவருக்கு ஒரு நியாயம், அரசியல்வாதிக்கு ஒரு நியாயமா என்று சமூக வலைதளங்களில் போலீசாரை பொது மக்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ஜெயகோபால் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கரணை ஆய்வாளர் அழகு, மடிப்பாக்கம் ஆய்வாளர் மகேஷ்குமார், உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, சுகுமார், மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆரோக்கியராஜ் ஆகியோர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது போலீசார் ஜெயகோபால் தீவிரமாக தேடி வருகின்றனர் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான சாலையின் நடுவில்  வைக்கப்பட்டிருந்த பேனர், தன்னுடைய மகன் திருமணத்திற்காக ஜெயகோபாலால் வைக்கப்பட்ட பேனர் என்பது குறிப்பிடத்தக்கது