திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அடக்கி வாசிக்கவில்லை என்றால் தேர்தல் நேரத்தில் பின்னடைவு ஏற்படும் என்று ஆதாரத்துடன் பிரசாந்த் கிஷோர் எடுத்துரைத்ததை தொடர்ந்தே ஸ்டாலின் இப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

அண்மையில் திமுக தொண்டர்களுக்கு கலைஞர் பாணியில் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் திமுக சார்பில் வைக்கப்படும் பதாகைகள், பேனர்கள், சுவரொட்டிகளில் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் தனது புகைப்படங்களை தவிர வேறு யார் புகைப்படங்களையும் பயன்படுத்தக்கூடாது என்று ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதாவது சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் உதயநிதியின் புகைப்படத்தை பேனர்கள், பதாகைகள் உள்ளிட்ட எதிலும் பயன்படுத்தக்கூடாது என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திமுக இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சியின் மேல் மட்ட அளவில் அவரது ஆதிக்கம் காணப்பட்டது. உதயநிதி முன்னிலைப்படுத்தப்பட்ட போது பிரசாந்த் கிஷோருடன் திமுக ஒப்பந்தம் எதுவும் செய்திருக்கவில்லை. ஆனால் திமுகவுடன் தேர்தல் ஒப்பந்தத்திற்கு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் முன் வந்த போது வைத்த முக்கிய நிபந்தனைகள் குடும்ப உறுப்பினர்களை கட்சி விவகாரங்களில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது தான். அப்போதைக்கு அதற்கு திமுக தலைமை ஓகே சொன்னாலும் உதயநிதி ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

திமுக – ஐபேக் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதில் இருந்தே உதயநிதியின் செயல்பாடுகளுக்கு லகான் போடும வேலையில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டு வந்தார். தேர்தல் வியூகத்தில் உதயநிதியை ஒதுக்கி வைத்தே அவர் திட்டங்களை முன்னெடுத்தார். இது உதயநிதி தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியை தொடர்ந்தே பிரபல வார இதழில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தலைமையில் தனக்கென தனி பிஆர்ஓ டீமை உதயநிதி அமர்த்தினார். அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளின் அடிப்படையில் தற்போது விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்று வருகிறார்.

உதயநிதி செல்லும் இடங்களில் எல்லாம் ஸ்டாலினுக்கு கிடைக்கும் மரியாதை கிடைக்கிறது. அவரும் மிகவும் ஆர்வத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும் என்கிற உத்வேகத்துடன் உதயநிதி மேற்கொண்டுள்ள இந்த பயணத்தின் போது சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. ஆர்வமிகுதியில் உதயநிதி பேசும் சில பேச்சுகளை திமுகவினரே ரசிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை டெட்பாடி பழனிசாமி என்பது, காவல்துறை சிறப்பு டிஜிபிக்கு மிரட்டல் விடுப்பது என உதயநிதியின் பேச்சு சமயத்தில் எல்லை மீறுகிறது.

உதயநிதியின் இந்த பேச்சுகள் தேர்தல் சமயத்தில் பேக்பயர் ஆகும் என்று பிரசாந்த் கிஷோர் கூறி வந்தார். ஆனால் ஸ்டாலின் அதை பொருட்படுத்தாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கட்சியின் உதயநிதியின் செயல்பாடுகள் மற்றும் கட்சியினர் அவரை எப்படி பார்க்கின்றனர் என பிகே டீம் ரகசியமாக சர்வே ஒன்றை எடுத்துள்ளது. அந்த சர்வேயில் உதயநிதியை பலரும் தலைவரின் மகன் என்கிற அளவிலேயே பார்ப்பது தெரியவந்துள்ளது.

மேலும் உதயநிதி புகைப்படத்துடன் பேனர்கள், பதாகைகள், சுவரொட்டிகள் வைப்பதை பெரும்பாலனவர்கள் விரும்பவில்லை. இளைஞர் அணிமேலிடம் கொடுக்கும் நெருக்கடியால் அவர்கள் உதயநிதி புகைப்படத்துடன் பிளக்ஸ் வைப்பதும் ஒரு சிலர் உதயநிதியை காக்கா பிடிக்க இதை செய்வதையும் பிகே டீம் தனது சர்வே மூலம் கண்டுபிடித்துள்ளது. அத்துடன் ஸ்டிங் ஆப்பரேசன் முறையில் உதயநிதி குறித்து சில நிர்வாகிகளுக்கே தெரியாமல் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றை எல்லாம் பார்த்து தான் உதயநிதியை தற்போது தட்டி வைக்க வேண்டும் என்கிற முடிவிற்கு ஸ்டாலின் வந்துள்ளார். அத்துடன் மாவட்டச் செயலாளர்களை அழைத்து உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருக்கிறார். மேலும்இதன் தீவிரத்தை உணர்த்தவே கடிதம் மூலம் பெரியார், அண்ணா, கலைஞர் தனது புகைப்படங்களை தவிர வேறு யார் புகைப்படத்தையும் திமுகவினர் பயன்படுத்த வேண்டாம் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.