Asianet News TamilAsianet News Tamil

பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு தடை -  பி.ஆர்.பாண்டியன்  வலியுறுத்தல்...

Ban on BJP election statement - p.r. pandian emphasis...
Ban on BJP election statement - p.r. pandian emphasis...
Author
First Published Apr 17, 2018, 9:36 AM IST


திருவாரூர்
 
பா.ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அறிக்கை வெளியிடுமானால் அதனை தடை செய்ய வேண்டும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நேற்று நடந்தது. 

இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் புண்ணியமூர்த்தி, மாநில பொருளாளர் ஸ்ரீதரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் சுப்பையன், மாநில இணைச்செயலாளர் வரத ராஜன், ஒருங்கிணைப்பாளர் தமிழார்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம், "காவிரி நீர் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. 

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ், தேர்தல் அறிக்கையில் கர்நாடகாவிற்கு சாதகமாக காவிரி நீர் பிரச்சனையை அனுகுவோம் என்ற உத்தரவாதம் அளித்துள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தேசிய செயலாளர் முரளிதரராவ் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

பா.ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அறிக்கை வெளியிடுமானால் அதனை தடை செய்ய வேண்டும். அந்த தேர்தல் அறிக்கையை தடை செய்திட முழு முயற்சியை எடுப்போம், போராட்டமும் நடத்துவோம்.  தேவையென்றால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். 

காவிரி நீர் பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடிட வேண்டும் என விவசாயிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அனைத்து கட்சி தலைவர்களுடன் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்துவோம். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இறுதி கட்ட போராட்டமாக வேதாரண்யத்தில் உள்ள உப்பு சத்தியாகிரக தூணில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி வருகிற 25-ஆம் தேதி தொடங்குகிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் பேரணியாக புறபட்டு திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் வழியாக சென்னையை அடைகின்றோம். பின்னர் அங்கிருந்து புறபட்டு திருவாரூர் வந்து திருவாரூரில் பேரணியை நிறைவு செய்கிறோம். 

இந்த பேரணி ஐந்து நாட்கள் நடக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பிரச்சாரம் செய்வோம்" என்று அவர் கூறினார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios