கிரிமினல் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிடவும், கட்சிப் பதவி வகிக்கவும் தடை விதித்தால் அது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதா என ஆய்வு செய்து விரைவில் முடிவெடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள்  தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசியல் கட்சி நடத்தவோ, கட்சிப் பதவி வகிக்கவோ அனுமதிக்க கூடாது என்றும் டெல்லியை சேர்ந்த, பா.ஜ., செய்தித் தொடர்பாளர், அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் சிலர் அவரை போலவே, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளனர். 

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்போது ஆஜரான வழக்கறிஞர்,  கிரிமினல் குற்றவாளிகள் தங்கள் தண்டனை காலத்திற்குப் பின் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் தற்போதைய நடைமுறை தொடர்ந்தால் பாலியல் பலாத்கார வழக்கில், சிறை சென்றுள்ள குர்மீத் ராம் ரஹீம் போன்றோர் எதிர்காலத்தில் எம்.பி.,க்களாகவும், அமைச்சர்களாகவும் வலம் வருவார்கள் என குற்றம்சாட்டினார்.

அரசு அதிகாரிகளோ, நீதித்துறையை சேர்ந்தவர்களோ குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் உடனடியாக, அவர்களின் பதவி பறிபோவதுடன், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.

ஆனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் இதில் முரணான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. எனவே, கிரிமினல் வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிப்பதோடு, அரசியல் கட்சியை நடத்தவும் கட்சிப் பதவி வகிக்கவும் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ரஞ்ஜன் கோகோய் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு,  கிரிமினல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிட ஆயுட்கால தடை விதித்தால் அது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானதா என்பது குறித்து ஆராய வேண்டும் என தெரிவித்தனர்.

இது குறித்து ஆய்வு செய்த பின்னரே முடிவுக்கு வர முடியும். என கூறிய நீதிபதிகள்  வழக்கு விசாரணை வரும் 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.