கருணாஸ் எடப்பாடி அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இன்னும் சில உறுப்பினர்கள் ஸ்லீப்பர் செல்களாக இருக்கக் கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 22 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், அவசர அவசரமாக மூன்று உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதன் நோக்கம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“தற்போது சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு 114 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் மூன்று உறுப்பினர்கள் அதிருப்தியாளர்களாக உள்ளார்கள். தமிமுன் அன்சாரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளார். கருணாஸ் எடப்பாடி அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இன்னும் சில உறுப்பினர்கள் ஸ்லீப்பர் செல்களாக இருக்கக் கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன” என்று சுட்டிக்காட்டியுள்ள பாலகிருஷ்ணன், ஆக மொத்தத்தில் மைனாரிட்டி அரசாக எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த குறைவான உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஆட்சியை நீடிக்க வைப்பதற்கான முயற்சியாகத்தான் மூவரையும் தகுதி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “சட்டமன்ற உறுப்பினர்களை பேரவைத் தலைவர் நினைத்த மாத்திரத்தில் தகுதி நீக்கம் செய்வதற்கு சட்டம் இடம் அளிக்கவில்லை. சட்டமன்றத்திற்குள் சம்பந்தப்பட்ட கொறடாவின் உத்தரவினை மீறும்போதுதான் சட்டப்படி அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும். சட்டமன்றத்திற்கு வெளியே சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக்கட்டுப்பாட்டை மீறும் போது,கட்சியிலிருந்து வேண்டுமானால் அவரை நீக்க முடியுமே தவிர சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்வது சட்டத்திற்கு விரோதமானதாகும்” என்று பாலகிருஷ்ணனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.