விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முதலமைச்சரை சந்தித்தார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

1998ல் ஓசூரில் நடந்த மதுவுக்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீச்சு நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால் பதவி இழக்க நேரிடும். மேல்முறையீட்டில் தண்டனை உறுதியானால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் அவரது பதவி பறிபோகும் நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கோரிக்கை வைத்த நிலையில், 3 ஆண்டுகால சிறைத் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட காரை ஒப்படைத்து விட்டு தனது சொந்தக் காரில் அரசு இலச்சினை இல்லாமல் நீதிமன்றத்தில் இருந்து கிளம்பிச் சென்றார்.

இந்நிலையில் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி இல்லத்திற்கு சென்ற பாலகிருஷ்ணரெட்டி அசரைச் சந்தித்து பேசினார். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.