நீதிமன்ற தண்டனையால் காலியான அமைச்சர் பதவியின் இடத்துக்கு மதுரையைச் சேர்ந்த எம்.எல்.ஏ. குறி வைத்திருக்கிறார். 

பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா சிறைத் தண்டனை பெற்றார். இதனால் அவரது அமைச்சர் பதவி காலியானது. அவர் வகித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் பொறுப்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியைப் பிடிக்க மதுரை எம்.எல்.ஏ. ஒருவர் காய் நகர்த்தி வருகிறார். 

எம்.பி, மேயர், எம்.எல்.ஏ. என பல பதவிகளில் இருந்துவிட்ட அவருக்கு, அமைச்சர் பதவி மீது ஒரு கண். 2016-ம் ஆண்டில் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதே அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், மதுரையைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்ததால், வேறுவழியின்றி அமைதியாகிவிட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எப்படியும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆவலில் இருந்து வருகிறார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. 

தான் அமைச்சர் ஆவதற்கு உள்ளூரைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் அவருக்கு உண்டு. இந்நிலையில் அமைச்சர் பாலகிருஷ்ணாவின் பதவி பறிபோனதால், அந்தப் பதவியைப் பிடிக்க அவர் ஆர்வம் காட்டிவருவதாக அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். இதற்காக சென்னையில் முகாமிட்டு வருகிறார் அந்த மதுரை எம்.எல்.ஏ.. ஆனால், மதுரைக்கு ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் இருப்பதால், மூன்றாவதாக அதே மாவட்டத்துக்கு பதவி தரக் கூடாது என்று கட்சி மேலிடத்தில் மூத்த அமைச்சர்கள் கூறிவிட்டதாகச் சொல்கிறார்கள். 

இதற்கிடையே கொடநாடு விவகாரம் சூடாகிவிட்டதால், எல்லோரும் அதில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்கள். தேர்தலுக்கு பிறகு ஆட்சி நிலவரம் எப்படி இருக்குமோ என்ற கவலையில் உள்ள மதுரை எம்.எல்.ஏ., தன்னோட கோரிக்கை உயிர் பெறுமா இல்லையா என்று தெரியவில்லை என்று தனது ஆதரவாளர்களிடம் கூறிவருகிறாராம்.