நடிகர் விஜய்க்கு தெரியாமல் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், மகன் பெயரில் கட்சி தொடங்க தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு எதிராக தனது ரசிகர்கள் யாரும் தந்தையின் கட்சியில் யாரும் இணைந்து கொள்ள வேண்டாம் என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தந்தை கட்சி ஆரம்பிக்க, மகன் மறுக்க என்னதான் நடக்கிறது விஜய் வீட்டில் என அவரது ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.  இவர்களுக்கு இடையில் என்னதான் நடக்கிறது என விசாரித்தோம். ‘’நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தன் மகனை கதாநாயக அறிமுகப்படுத்தினாலும் விஜயகாந்துடன் செந்தூரப் பாண்டி படத்தில் நடிக்க வைத்து அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் நடிகர் விஜயை கொண்டு சேர்த்தவர் அவரது தந்தை எஸ்.ஏ.சி. அடுத்தடுத்து அவரது இயக்கத்தில் விஜய் நடித்த சில படங்கள் சறுக்கினாலும் முதல் ரசிகனாக விஜய் பெயரில் மட்டும் தொடங்கியவர் அவரது தந்தை. ஐந்து வருடங்களுக்கு முன்பு அதனை மக்கள் இயக்கமாக மாற்றினார் எஸ்.ஏ.சி.

 தற்போது அதன் அடுத்த கட்டமாக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளார். விஜய்யின் ரசிகர் பலத்தை வைத்து தேர்தல் நேரத்தில் ஆதரவு தருவதாக கூறி அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேரம் பேசும் நோக்கத்தில் இந்த கட்சி தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கட்சி ஆரம்பித்த அன்றே தனது ஒற்றை அறிக்கையின் மூலம் அகில இந்திய தளபதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சிக்கு நடிகர் விஜய் முடிவு கட்டியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் அவரது ஆதரவாளர்களை தனது இயக்கத்தில் இருந்து நீக்கி புதிய நிர்வாகிகளை விஜய் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. பழைய நிர்வாகிகள் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இதுகுறித்து புலம்பி இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காகவே விஜய்க்கு தெரியாமல் அரசியல் கட்சியாக மாற்றப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது என்கிறார் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

இன்னொரு காரணமும் கூறப்படுகிறது.  விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் ஜோதிடம் வாஸ்து மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். சமீபத்தில் விஜய் நண்பர்கள் சிலர் டெல்லியை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவரிடம் விஜயின் ஜாதகத்தை பார்த்துள்ளனர். 'குருபெயர்ச்சிக்கு பின் ஆறு மாதங்களில் தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்கும் ராஜயோகம் இருக்கிறது என அந்த ஜோதிடர் கணித்துக் கூறியுள்ளார். இதனையடுத்தே எஸ்.ஏ.சந்திரசேகர் வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி துவக்க திட்டமிட்டு தேர்தல் கமிஷனில் கட்சி பெயரை பதிவு செய்துள்ளார்

.

அடுத்ததாக கட்சியின் பெயர் கொடியின் நிறம் கட்சி துவக்குவதற்கான தேதியை குறித்து தரும்படி கோரி விஜய்க்கு நெருக்கமான கடலுார் மாவட்ட ஜோதிடரை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்தித்துள்ளனர். அந்த ஜோதிடரோ 'தற்போது விஜய் அரசியலில் குதிக்க வேண்டாம். அவருடைய பூசம் நட்சத்திரத்தால் பணம் உழைப்பு எல்லாம் விரயமாகி விடும்' என கூறியுள்ளார்.

இதையடுத்து 'என் பெயரில் கட்சி துவக்க வேண்டாம். 2026ல் சட்டசபை தேர்தலை சந்திக்கலாம்' என தந்தையிடம் விஜய் கூறியுள்ளார். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் பிடிவாதமாக இருந்து மகனின் பேச்சை மீறி கட்சிக்கான அறிவிப்பை வெளியிட வைத்துள்ளார். இதுவும் பிரச்னைக்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.