நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத காரணத்தினால் லோக்கல் பாலிடிக்சில் இருந்து ஒதுங்கியிருந்த குஷ்பு நாங்குநேரி பிரச்சாரம் மூலமாக திரும்பி வந்துள்ளார்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், பிறகு நாடாளுமன்ற தேர்தல் போன்றவற்றில் போட்டியிட குஷ்பு மிகத் தீவிரமாக முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை. பிறகு நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக்குவதாக காங்கிரஸ் மேலிடம் குஷ்புவுக்கு வாக்குறுதி அளித்ததாக சொன்னார்கள். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு குஷ்பு தமிழக அரசியலில் இருந்து ஒதுங்கினார். எந்த விவாத நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை. சத்தியமூர்த்தி பவன் வருவது இல்லை. காங்கிரஸ் நடத்திய ஒன்று இரண்டு போராட்டங்களிலும் கூட தலைகாட்டவில்லை. தேசிய அளவிலான ஊடகங்களில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி வந்தார். ட்விட்டரில் பாஜக எதிர்ப்பு நிலையை தொடர்வதோடு குஷ்பு நிறுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியில் குஷ்பு திடீர் பிரச்சாரம் மேற்கொண்டார். வழக்கத்தை காட்டிலும் கூடுதல் உத்வேகத்துடன் குஷ்பு நாங்குநேரியில் பிரச்சாரத்தை தொடங்க அவரை பார்க்கவும் கூட்டம் முண்டியடித்தது. மேலும் தமிழக அரசை வெளுத்து வாங்கிய குஷ்புவின் பிரச்சாரம் நன்றாக எடுபட்டது.

குஷ்புவின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் குறித்து விசாரித்த போது நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் ரூபி மனோகரன் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள். வேட்பாளர் ரூபி மனோகரன் நேரடியாக குஷ்புவை தொடர்பு கொண்டு பேசியதாகவும், சில வாக்குறுதிகளை அளித்ததாகவும் சொல்கிறார்கள். அந்த வாக்குறுதி சினிமாவில் ஒரு பாடலுக்கு போடும் குத்தாட்டத்திற்கு கிடைக்கும் ஆதாயத்தை விட பல மடங்கும் அதிகமாக இருந்ததாக சொல்கிறார்கள். இதனால் தான் எதற்கு வீட்டில் சும்மா இருக்க வேண்டும என்று குஷ்பு பிரச்சாரத்திற்கு புறப்பட்டுவிட்டாராம்.