உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனமான ‘பதஞ்சலி’யின் முதலாளியான பாபா ராம்தேவ், ‘யோகா’வை முதலீடாக வைத்தே பெருமுதலாளி ஆனவர். பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர். குஜராத்தில் மோடி முதலமைச்சர்  ஆவதற்கும், 2014-இல் அவர் பிரதமர் ஆவதற்கும் பிரச்சாரம் செய்தவர்.

 அதற்குப் பிரதிபலனாக, பாஜக ஆளும் மாநிலங்களில்,தற்போது ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்களை வளைத்துப் போட்டு, கார்ப்பரேட் சாமியாராக வலம் வந்து கொண்டிருப்பவர்.

இப்படிப்பட்டவர்தான், தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், திடீரென மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். “தற்போது இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து விட்டதாகவும், இளைஞர்களிடையே உள்ள அனைத்து மனக் குழப்பங்களுக்கும் வேலையின்மையே முக்கியக் காரணமாக உள்ளது” என்றும் கூறியிருக்கும் ராம்தேவ், “ஒரு தொழிலதிபராகவும், யோகா ஆசிரியராகவும், நான் பல வேலைவாய்ப்புக்களை உருவாக்கி இருக்கிறேன் என்றார்.

ஆனால், ஆட்சியாளராக இருந்துகொண்டு பிரதமர் மோடி அதைச் செய்யத்தவறி விட்டார்” என்று விளாசியுள்ளார்.தன்னால், 6 மாதத்தில் இரண்டரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்றார்.

இந்தஅடிப்படையில், மத்திய பாஜக அரசு எத்தனை வேலைவாய்ப்புக்களை உருவாக்கி இருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.அதுமட்டுமன்றி, சமீபத்திய பெட்ரோல் - டீசல் விலை குறித்தும் ராம்தேவ் கடுமையாக மோடியை விமர்சித்துள்ளார்.

பெட்ரோல் - டீசல் விலைஉயர்வால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த விஷயத்தை, பிரதமர் மோடி ஒரு சாமானியனின் மனநிலையிலிருந்து யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால், விலைவாசி உயர்வு காரணமாகவே மோடிமீண்டும் பிரதமர் ஆக முடியாமல் போய்விடும்” என்று அவர் சாபமிட்டுள்ளார்.

மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டுநடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், மோடிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததாகவும், ஆனால், “இந்தமுறை ஏன் அவர்களுக்காக நான் பிரச்சாரம் செய்ய வேண்டும்?” என்று கேட்டுள்ள ராம்தேவ், “நான் பாஜக-வுக்கும்,மோடிக்கும் ஆதரவாக 2019 தேர்தலில் பிரச்சாரம் செய்யமாட்டேன்” என்றும் விரக்தியாக குறிப்பிட்டுள்ளார்.