ஸ்டாலினை சமாளிக்க சமூகவலைதள பிரச்சாரம்! அழகிரி மகனின் புதிய அவதாரம்!
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சமூக வலைளதங்களில் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்க அழகிரியின் மகன் துரைதயாநிதி சமூக வலைதளங்களில் இயங்கும் பிரபலங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களை சந்தித்து பேசி வருகிறார்.
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக சமூக வலைளதங்களில் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்க அழகிரியின் மகன் துரைதயாநிதி சமூக வலைதளங்களில் இயங்கும் பிரபலங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களை சந்தித்து பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் தி.மு.க ஐ.டி விங்க் மிகவும் வலிமையானதாக உள்ளது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட அன்று இந்தியா முழுவதும் ட்விட்டரில் நம்பர் ஒன் டிரென்டாக தலைவர் ஸ்டாலின் எனும் ஹேஸ்டேக் இருந்தது. அந்த அளவிற்கு மு.க.ஸ்டாலினை சமூக வலைதளங்கள் மூலம் தி.மு.க ஐ.டி விங்க் புரமோட் செய்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் அழகிரிக்கு எதிராகவும் தி.மு.க ஐ.டி விங்க் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதிலும் மதுரையில் அழகிரி ஆலோசனை கூட்டத்திற்கு ஆளே வரவில்லை என்பதைமையமாக வைத்து ஏராளமான மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கப்பட்டது. இதன் பின்னணியிலும் தி.மு.க ஐ.டி விங்க் உள்ளது என்று அழகிரி தரப்பு நம்புகிறது.
மேலும் அரசியலில் இத்தனை நாட்கள் ஒதுங்கி இருந்த காரணத்தினால் கள அரசியலில் மட்டும் அல்ல சமூக வலைதள அரசியலிலும் அழகிரி தரப்புக்கு போதிய அனுபவம் இல்லை.இதனால் சமூக வலைதளங்களில் ஸ்டாலின் தரப்புக்கு பதிலடி கொடுக்கவும், அழகிரியை புரமோட் செய்யவும் அவரது மகன் துரை தயாநிதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் முதல்கட்டமாக சமூக வலைதளங்களில் தீவிரமாக அரசியல் பேசி வரும் தனி நபர்களை அழைத்து அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டு அழகிரியை புகழ்ந்து பதிவுகள் இட வைத்து வருகிறார். மேலும் சென்னையில் உள்ள ஊடகங்களின் தலைமை பொறுப்புகளில் உள்ளவர்களையும் நேரில் சந்தித்து அழகிரி சென்னையில் நடத்த உள்ள அமைதி ஊர்வலத்தை புரமோட் செய்து தருமாறு துரை தயாநிதி கேட்டு வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் அழகிரிக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட ஒரு பெரும் தொகை செலவிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கள அரசியலை தந்தை அழகிரி கவனித்துக் கொள்ள சமூக வலைதளங்களில் அரசியலை தான் கவனித்துக் கொள்கிறேன் என்றே தனக்கு நெருக்கமானவர்களிடம் துரை தயாநிதி கூறி வருகிறார். இதனிடையே அழகிரிக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட துரை தயாநிதி சமூக வலைதளங்களில் இயங்குபவர்களுக்கு காசு கொடுப்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது.