ஸ்டாலினை அண்மையில் விமர்சித்த அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வால் செயல்பட முடியாத காரணத்தால் அரசியலிலிருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வருகிறார். அதனால் செயல் தலைவர் ஸ்டாலின் கட்சியை வழிநடத்தி வருகிறார். 

ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்த நிலையில், கட்சியிலிருந்து அழகிரி ஒதுக்கிவைக்கப்பட்டார். தென் மண்டல திமுக பொறுப்பாளராக இருந்த அழகிரி, தென் மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட பிறகு, அரசியல் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கி நிற்கிறார் அழகிரி. 

இந்நிலையில், கட்சியை வலுப்படுத்தும் விதமாக அதிகமான புகார்கள் எழுந்த நிர்வாகிகளை களையெடுத்து புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். அண்மையில், மதுரை, தேனி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்ட நிர்வாகிகள் சிலரை அதிரடியாக மாற்றினார் ஸ்டாலின். 

இந்த சூழ்நிலையில், கடந்த வியாழக்கிழமை திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அழகிரி, திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காக மட்டுமே இருப்பதாகவும், தன் பக்கம் தான் உண்மையான தொண்டர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சென்னையில் இருப்பவர் செயல்படாத தலைவர் என்றும் செயல்படும் வீரர்கள் பாலமேட்டில் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே ஸ்டாலினை அதிமுகவினரும் ஆட்சியாளர்களும் செயல்படாத தலைவர் என விமர்சித்துவரும் நிலையில், அழகிரியும் அவ்வாறு விமர்சித்தது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 

ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அழகிரி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளார். ஸ்டாலின் மீது விமர்சனம், கருணாநிதியின் சந்திப்பு என அடுத்தடுத்து அதிரடியாக இயங்கிவருகிறார் அழகிரி.