கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சென்னையில் மட்டும் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது மதுரை, விருதுநகர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மருத்துவமான கபசுர குடிநீர் மற்றும் ஹோமியோபதி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே முக்கிய காரணியாக விளங்குவதால் ஆயுர்வேத மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது. 

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதன்படி இந்துகாந்தகஷாயம், அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்துகாந்தகஷாயம் திருவில்லியம், திப்பிலி வேர், தலமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. அகஸ்திய ரசாயணம், கூஷ்மாண்ட ரசாயணம் கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகளால் தயாரிக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்  மருத்துவர்களின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம் என கூறியுள்ளார்.