உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-இல் இடிக்கப்பட்டது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த இடத்துக்கு உரிமை கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அலஹாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை நிர்மோஹி அகாரா, சன்னி மத்திய வக்பு வாரியம், ராம் லல்லா ஆகிய மூன்று தரப்புகளுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 14  மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின்  விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. போப்டே, எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள்தோறும் நடந்து வந்தது.  இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் கடந்த மாதம் 16-ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பை ஒத்திவைத்தார்

இந்நிலையில் வரும் 17-ம் தேதிக்குள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற இருப்பதால், அயோத்தி வழக்கில் அதற்கு தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதையொட்டி அயோத்தியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 144 தடை உத்தரவு போடப்பட்டது. அயோத்தியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் தேவையில்லாத கருத்துகளையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் பதிவிட வேண்டாம் என்றும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 4 ஆயிரம் துணை ராணுவப் படையினர் உத்தரப் பிரதேச பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்


இந்தநிலையில் அயோத்தி வழக்கில் நாளை (9.11.2019) காலை 10;30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.