13 முதல்15ம் தேதிக்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு..!

நவம்பர் 13 முதல் 15ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு அயோத்தி நில உரிமை உள்பட 4 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளது. இதற்கிடையே எந்தவொரு வன்முறை சம்பவங்களும் நிகழாமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அயோத்தி நில உரிமை வழக்கு, சபரி மலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகத்தையும் சேர்ப்பது, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிளீன் சான்றிதழ் அளித்ததை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு செய்த மனுக்கள் ஆகிய 4 வழக்குகள் மீதான விசாரணையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முடித்து விட்டது. தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதனால் தீபாவளி விடுமுறைக்கு பின் கடந்த 4ம் தேதி முதல் மேற்கண்ட 4 வழக்குகளிலும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தீர்ப்பு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் தீர்ப்பு தாமதமானது.

இந்நிலையில் அயோத்தி உள்பட 4 முக்கிய வழக்குகளில்  தீர்ப்பு சொல்ல நவம்பர் 13 முதல் 15ம் தேதிகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தேர்வு செய்துள்ளதாக தகவல். இதற்கிடையே அயோத்தி வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்பதால் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிக்கை அனுப்பிவிட்டது.