தமிழக அரசியலில் ரஜினியை களம் இறக்குவதற்கு வசதியாக தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு உலை வைக்கும் வேலையுடன், அ.தி.மு.கவின் இமேஜையும் டேமேஜ் செய்யும் வேலைகளில் பா.ஜ.கவின் கொள்கை வகுப்பாளர்கள் தீவிரம் காட்டி வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ந் தேதி அரசியலுக்கு வரஉள்ளதாக ரஜினிஅறிவித்தார். 

எல்லாம் சரியாக அமைந்தால் உடனடியாக அரசியல் கட்சியை துவங்கிவிடுவேன் என்றும் ரஜினி கூறினார். இதனை தொடர்ந்து ரஜினி தனது ரசிகர் மன்றத்தின் பெயரை மக்கள் மன்றம் என்று மாற்றினார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்தார். ஒன்றியம், ஊராட்சி கிளை வரை ரசிகர்கள் மன்றங்கள் தற்போது வலுப்படுத்தப்பட்டுவிட்டன.

தி.மு.க, அ.தி.மு.கவில் இருப்பதை போல் ரஜினியின் மக்கள் மன்றத்திற்குள் மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, விவசாயிகள்அணி, மீனவர்கள் அணி என்றும் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாகியுள்ளது. ஆனால் ரஜினி அரசியல் கட்சி துவங்குவது எப்போது என்கிற தகவலை மட்டும்உறுதிப்படுத்தாமல் உள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதற்கு மிக முக்கிய காரணம் என்று கூறப்படுபவர் சென்னையை சேர்ந்த ஆடிட்டர் ஒருவர் தான். 

இவர் தான் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா தமிழக முதலமைச்சராவதை தடுத்தவர் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி அ.தி.மு.கவை இரண்டாக உடைத்து சசிகலா குடும்பத்தை ஓரங்கட்டிவிட்டு, மீண்டும் அவர்களை இணைத்தவரும் இந்த ஆடிட்டர் தான். இந்த ஆடிட்டரின் ஆலோசனைகள் தான் ரஜினி அரசியல் கட்சி துவங்க உள்ளதாக அறிவித்ததற்கு காரணம் என்று அரசியல் தெரிந்த அனைவருக்குமி தெரியும். 

மேலும் இந்த ஆடிட்டர் ரஜினியை தமிழக அரசியலில் களம் இறக்குவதற்கு தேவையான ஒருசூழலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக டெல்லியில் தனக்கு உள்ள பா.ஜ.க மேலிட தொடர்புகளையும் இவர் பயன்படுத்தி வருவதாக சொல்லப்படகிறது. இயல்பாகவே ரஜினி மீது நாட்டம் கொண்டுள்ள பா.ஜ.கவும் தற்போது ஆடிட்டர் பேச்சை கேட்டு முதல்கட்டமாக அ.தி.மு.கவின் இமேஜை டேமேஜ் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது. 

குட்கா முறைகேட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தியது இதன் முதல் கட்டம் என்று சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து நடைபெற உள்ள கைது நடவடிக்கை அ.தி.மு.கவின் இமேஜை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றுவிடும் என்று சொல்லப்படுகிறது.

 இது ஒரு புறம் இருக்க ரஜினி நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்கும் பட்சத்தில் அவருக்கும் ஸ்டாலினுக்கும் மட்டுமே நேரடி போட்டி இருக்க வேண்டும் என்று அந்த ஆடிட்டர் கருதுகிறார். இதனால் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு உலை வைக்கும் பணிகளும் துவங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. 

இந்த பணிகளின் ஒரு அம்சமாகவே ரஜினிக்கு நெருக்கமானவரும் காங்கிரஸ் பிரமுகருமான கராத்தே தியாகராஜன் தி.மு.கவிற்கு எதிராக வெளிப்படையாக பேசியுள்ளார். இப்படியாக ரஜினிக்கு ஆதரவாக தமிழக அரசியலில் காய் நகர்த்தல்கள் தொடங்கியுள்ளது. ஆனால் ரஜினியோ பேட்ட படத்தின் படப்பிடிப்பிற்காக லக்னோவில் முகாமிட்டுள்ளார். படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய பிறகு அவரது அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாகும் என்கிறார்கள்.